பிளஸ் 2 பொதுத்தேர்வில் முரண்பாடுள்ள விடைத்தாள்கள், மதிப்பெண் வேறுபாடு தொடர்பாக சம்மந்தப்பட்ட மாணவர், ஆசிரியர்களிடம் தேர்வுத்துறை விசாரணை நடத்துகிறது. விசாரணைக்கு உட்பட்ட மாணவரின் தேர்ச்சி முடிவை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 2 முதல் 27 வரை நடந்தது. ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். பிளஸ் 1 அரியர் தேர்வையும் மாணவர்கள் எழுதினர். இவர்கள் விடைத்தாள்கள், 70க்கும் மேற்பட்ட முகாம்களில், ஏப்., 4 முதல் 20 வரை மதிப்பீடு செய்யப்பட்டது.
அப்போது, விடைத்தாளில் உரிய முத்திரை இல்லாதது, ஒரே விடைத்தாளில் சில பக்கங்களில் கையெழுத்து மாறுபட்டிருந்தது, முதன்மை கண்கணிப்பாளர் கையெழுத்து இல்லாதது, சில பக்கங்கள் கிழிக்கப்பட்டது, மதிப்பெண் பதிவிட்டதில் ஆசிரியரின் கவனக்குறைவு போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, மாவட்ட வாரியாக சம்பந்தப்பட்ட தேர்வர், அறை கண்காணிப்பாளர், மதிப்பீடு செய்த ஆசிரியருக்கு தேர்வுத்துறைநோட்டீஸ் அனுப்பியது. முதற்கட்டமாக, சென்னையில் ஏப்., 28ல் மேல்நிலை பள்ளிகளுக்கான இணை இயக்குநர் தேர்வுத்துறை அலுவலகத்தில், 18 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
தேர்வுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மதுரையில் 2022ல் விடைத்தாள் மதிப்பீட்டு முகாமில் முறைகேடு நடந்தது. பலர் கைது செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக, விடைத்தாள் திருத்தும் பணிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்தாண்டு முதல்முறையாக, 'ரேண்டமாக' விடைத்தாள்களை ஆய்வு செய்ததில், இதுபோன்ற முரண்பாடுகள் காணப்பட்டன.
சில மாணவர்கள் விடைத்தாளில் பல பக்கங்களை கிழித்து எடுத்துச் சென்றும், பல பக்கங்களில் ஏதும் எழுதாமல் விட்டு வைத்துள்ளதும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த முரண்பாடுகளின் உண்மை தன்மை குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
ஆசிரியர்கள் பக்கம் வாரியாக மதிப்பெண்களை பதிவு செய்வதில் கவனக்குறைவாக இருந்துள்ளது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையால், பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடுவதில் தாமதம் இருக்காது. மே 6ல் வெளியிடப்படும். சந்தேகம் உள்ள மாணவர்களின் முடிவு நிறுத்தி வைக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.
மறு கூட்டல் முறை விரைவில் ரத்து
இந்தாண்டு முதன்முறையாக, விடைத்தாள் திருத்தும் முகாமில் சோதனை அடிப்படையில் மதிப்பெண்கள் பதிவிடுவதில், புதிய சாப்ட்வேர் பயன்படுத்தப்பட்டது. ஒவ்வொரு முகாமிலும், 25 முதல் 50 ரேண்டமாக எடுத்து, அதில் பக்கம் வாரியாகவும், வினாக்கள் வாரியாகவும் வழங்கப்பட்ட மதிப்பெண், மொத்த மதிப்பெண்கள் சரிபார்க்கப்பட்டது. அடுத்தாண்டில் இந்த சாப்ட்வேர் முழு அளவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இதன் வாயிலாக சி.பி.எஸ்.இ.,யில் உள்ளது போல், மறுகூட்டல் முறையை ரத்து செய்யும் முடிவில் மாநில தேர்வுத்துறை உள்ளது.
No comments:
Post a Comment