மாணவர்கள் அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம் - அமைச்சர் பார்த்திபன் - Asiriyar.Net

Saturday, May 30, 2026

மாணவர்கள் அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம் - அமைச்சர் பார்த்திபன்





பள்ளிச் சீருடையுடன் மாணவர்கள் பள்ளிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பள்ளிகள் வரும் 4ம் தேதி திறக்கப்படுவதை முன்னிட்டும், அதன் பின்னர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி,

அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை திறக்கப்பட உள்ளதை முன்னிட்டும், 2026-27 கல்வியாண்டில் மாணவர், மாணவியர்களுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டை அவர்தம் கல்வி பயிலும் பள்ளி, கல்லூரியிலேயே வழங்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக ஏற்பாடு செய்து வருவதால், அதற்கு தேவையான கால அளவினை கருத்தில் கொண்டு, பள்ளி மாணவ, மாணவியர்கள் சீருடை அணிந்து, எவ்வித சிரமமின்றி தத்தம் இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரை கட்டணமின்றி சென்று வருவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

அதே போன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவியர்கள் தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து கட்டணமின்றி எவ்வித சிரமமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுகின்றது.


மேலும் பள்ளி துவங்கும், முடியும் நேரம் வரை பேருந்துகள் சரியாக இயங்குவதை கண்காணித்திட போக்குவரத்துக் கழக அலுவலர்கள் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிய பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி மாணவ, மாணவியர்களை பாதுகாப்பாக ஏற்றி, இறக்கி செல்லவும் அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நடத்துநர், ஓட்டுநர்களுக்கும் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad