Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Friday, September 4, 2026

தலைமை ஆசிரியர் அறையோடு ஆய்வை முடிப்பதா? கல்வி துறைக்கு ஆணையம் ‘ அதிருப்தி’



தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நேற்று கலெக்டர் ஆபீசில் நடத்திய குழந்தை நல அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக்கல்வி துறையின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்தது. 


ஒண்டிப்புதூர் அரசு மேல்நிலை பள்ளியில் ஆணைய குழு ஆய்வு நடத்திய போது, மாணவர்கள் சிலர் போதை பொருள் வைத்திருந்தது தெரிந்தது. பள்ளியின் சுற்றுச்சுவர் மாணவர்கள் எளிதாக ஏறி குதித்து வெளியே செல்லும் வகையில் இருப்பதையும் சுட்டிக்காட்டினர்.


மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளிகளுக்கு ஆய்வுக்கு செல்லும்போது, தலைமையாசிரியர் அறையோடு ஆய்வை முடித்து கொள்கின்றனரே தவிர, பாதுகாப்பு சார்ந்த முக்கிய விஷயங்களை கவனிப்பது இல்லை;  பல பள்ளிகளில் மாணவர்கள் புகார் தெரிவிக்க ‘மாணவர் மனசு’ புகார் பெட்டி வைக்கவில்லை என்பதை கண்டித்தனர். 


இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் (ஆர்.டி.இ.) ஏழை மாணவர்களுக்கான சேர்க்கை குறித்து கேள்வி எழுப்பினர். தொடர்ந்து 2 ஆண்டுகளாக ஆயிரம் இடங்களுக்கு மேல் காலியாக இருப்பது ஏன்? என்பதற்கு அதிகாரிகள் கூறிய காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்றனர். 2025–26ல் ஒதுக்கப்பட்ட 3,395 இடங்களில் 1,638; 2026–27ல் 1,692 இடங்கள்  மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.


பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் விவரங்களை முறையாக சேகரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக புகார்கள் பெறப்பட்டால், குழந்தைகள் நலக் குழு மற்றும் போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகளை தாமதமின்றி பதிவு செய்து, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


குழந்தைகள் நலன் தொடர்பான துறைகள் ஒருங்கிணைந்து செயல்படவில்லை என்றால், கோவை மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என அதிகாரிகளுக்கு குழுவினர் அறிவுறுத்தினர்.


கூட்டத்தில் காவல்துறையின் போக்சோ பிரிவு, பள்ளிக்கல்வித்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்காததற்கும் குழுவினர் அதிருப்தி தெரிவித்தனர்.




No comments:

Post a Comment

LightBlog