தமிழக அரசு பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து சிறப்பாக செயல்படும் என்றும், மாணவர்களின் தேவைக்கேற்ப அதன் மெனு கார்டு மேம்படுத்தப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தவெக அரசு கடந்த 10-ம்தேதி பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் தங்களது களப்பணிகளை தவெக அரசு செவ்வனே செய்து வருகிறது.
இதற்கிடைய சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது காலை உணவு மற்றும் மதிய உணவு திட்டங்கள் தொடருமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,
கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டமாக இருந்தாலும் மாணவர்களுக்கு பயனுள்ள திட்டமாக இருந்தால் அனைத்து திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
அந்த வகையில் தமிழக அரசு பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு மற்றும் மதிய உணவு திட்டங்கள் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தப்படும், அது நிறுத்தப்படாது என்றார். எந்த சூழலிலும் குழந்தைகளை பாதிக்கும் முடிவுகள் எடுக்கப்படமாட்டாது உணவு தரம் குறித்த புகார்கள் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உணவு விஷயங்களில் எந்தவித சமரசமும் செய்யப்படமாட்டாது என்றார்.
காலை உணவுத் திட்ட மெனுவில் மாற்றங்கள் வருமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், தற்போது உள்ள நடைமுறைப்படி மாணவர்களுக்கு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை தினசரி ஒவ்வொரு வகையான உணவுகள் வழங்கப்படுகிறது. காலை உணவு திட்டத்தை இன்னும் மேம்படுத்தி சத்தான உணவுகள் வழங்க திட்டமிட்டு வருகிறோம் என்றும், உணவு நிபுணர்கள் ஊட்டச்சத்து, செலவு, செயல்திறன் போன்றவற்றை ஆய்வு செய்து மெனு தயாரிப்பதாகவும், காலத்திற்கேற்ப மாணவர்களின் விருப்பங்களை கருத்தில் கொண்டு மெனு கார்டு மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
காலை உணவு தரமானதாக இல்லை என்றும், குப்பைத் தொட்டியில் கொட்டுவது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளிவந்தன.
இது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், காலை உணவு தரமானதாக இல்லை என்று புகார்கள் வந்தால், அதற்குரிய போர்க்கால அடிப்படையில், துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர் எந்த அதிகாரியாக இருந்தாலும் ஆசிரியராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறையில் தவறு செய்யும் அலுவலர்கள் மீது தயவு இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

No comments:
Post a Comment