வரும் ஜூலை 17ம் தேதி முதல் சுய கணக்கெடுப்பும்; ஆக. 1ம் தேதி முதல் வீடு வீடாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் துவங்க உள்ளன.
நம் நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027 நடைபெற உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் இதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன.
முதல் முறையாக, காகிதத்துக்கு பதில் டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதால், இந்த கணக்கெடுப்பு தனித்துவமானதாக கருதப்படுகிறது.
சட்டசபை தேர்தல் முடிவடைந்ததையடுத்து, தமிழகம் முழுவதும், மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பணிகள் வேகமெடுத்துள்ளன.
திருப்பூர் மாவட்டத்தில் முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலராக கலெக்டர் நியமிக்கப்பட்டுள்ளார். மாநகராட்சிக்கு, மாநகராட்சி கமிஷனர்; ஊரகம், நகர்ப்புற பகுதிகளில் பொறுப்பு அலுவலர்களாக 9 தாசில்தார்கள்; நகராட்சி கமிஷனர்கள் 7 பேர்; பேரூராட்சி செயல் அலுவலர்கள் 14 பேர்; ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் 13 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு
இந்நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர்கள், பொறுப்பு அலுவலர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்களுக்கான மூன்று நாள் பயிற்சி வகுப்பு, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் துவங்கியது.
பயிற்சியை துவக்கிவைத்து கலெக்டர் மனிஷ் நாரணவரே பேசுகையில், ‘தமிழகத்தில், 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில், சுய கணக்கெடுப்பு மற்றும் டிஜிட்டல் முறை கணக்கெடுப்பு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
சுய கணக்கெடுப்பில், வரும் ஜூலை 17 முதல் 31 வரை, பொதுமக்கள் தாங்களாகவே, இணையதளம் வாயிலாக, தங்கள் விபரங்களை தெரிவிக்கலாம். ஆகஸ்ட் 1 முதல் 30ம் தேதி வரை, கணக்கெடுப்பாளர்கள், வீடு தேடிச் சென்று கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்வர்.
இப்பணிகளில் ஈடுபடும் கணக்கெடுப்பு அலுவலர்கள், பொறுப்பு அலுவலர்கள், தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு தற்போது, தொடர்ந்து மூன்று நாட்கள் பயிற்சி அளித்து, தயார்படுத்தப்பட்டு வருகின்றனர்’, என்றார்.
மாநகராட்சி கமிஷனர் அமித், டி.ஆர்.ஓ. கார்த்திகேயன், சென்னை மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரக இணை இயக்குனர் சுபா மற்றும் அனைத்து தாசில்தார்கள், நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்பட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபடும் 200 க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment