Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Wednesday, May 27, 2026

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி - ஆசிரியர்கள் அதிருப்தி




க்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேறு ஒன்றியக் கிராமங்களில் பணியாற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்ய கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


நாட்டின் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு- இரு கட்டமாக நடக்க உள்ளது. முதற்கட்டமாக வீட்டின் நிலைமை, வீடு வசதி குறித்த தரவுகள் சேகரிக்கப்படும். இரண்டாம் கட்டமாக நாட்டின் தனிநபர் வாரியாக மக்கள் தொகை, சமூக, பொருளாதார விவரங்கள் சேகரிக்கப்படும். மேலும் ஜாதி தொடர்பான கேள்வியும் சேர்க்கப்படும். இந்த பணியில் நாடு முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்கெடுப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் வீடு வீடாகச் சென்று பாதுகாப்பான அலைபேசி செயலிகளைப் பயன்படுத்தி தரவுகளை சேகரிக்க வேண்டும்.


இந்நிலையில் கணக்கெடுப்பு பணிக்கான ஆசிரியர்கள் தேர்வு கல்வித்துறை மூலம் நடந்து வருகிறது. அதில் காரைக்குடி மாநகராட்சியில் உள்ள குடியிருப்புகளில் கணக்கெடுக்க மாவட்டக் கல்வி அலுவலகத்தினர் (தொடக்கக்கல்வி) சாக்கோட்டை, கல்லல், தேவகோட்டை, திருப்புத்தூர் ஒன்றிய ஊராட்சி பள்ளி ஆசிரியர்களை கோரியுள்ளனர். கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் என்று 500 பேரை தேர்வு செய்துள்ளனர். 

அதில் மூத்த ஆசிரியைகளே அதிகமாக உள்ளனர். தேர்வான ஆசிரியர்கள் பலரும் ஒரு ஆசிரியர், 2 ஆசிரியர்கள் பணியாற்றும் துவக்கப்பள்ளிகளில் பணியாற்றுபவர்கள். 

இவர்கள் கிராமங்களிலுள்ள பள்ளியில் பணியாற்றி விட்டு மாலை 4:10 மணிக்கு மேல் குடியிருப்பிற்கு திரும்பி, பின்னர் கணக்கெடுக்க 25 கி.மீ. தொலைவில் உள்ள காரைக்குடிக்கு சென்று கணக்கெடுப்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்றும், ஒரு வீட்டில் கணக்கெடுக்க குறைந்தது 10 நிமிடம் முதல் 20 நிமிடங்களாகும் நிலையில் தினசரி சில வீடுகளில் மட்டுமே கணக்கெடுக்க முடியும் என்றும், பயணத்திலேயே அதிக நேரம் விரயமாகி விடும் என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


அறிமுகமில்லாத பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பதால், துல்லியமாகவும், பாதுகாப்பாகவும், விரிவானதாகவும் கணக்கெடுக்க முடியாது என்கின்றனர். மேலும், பணியாற்றும் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாமல் வகுப்புகள் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். 

இதனால்,பள்ளி மாணவர்களின் அன்றாட வகுப்பு பாதிக்காமலிருக்க, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்று பணியாற்றும் ஒன்றியத்தில் கணக்கெடுப்பு நடத்தவும், 50 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்களை கணக்கெடுப்பு பணியில் இருந்து விடுவிக்கவும், ஆசிரியர்கள் கல்வித்துறையினரிடம் கோரியுள்ளனர்.


No comments:

Post a Comment

LightBlog