தமிழக அரசுப் பள்ளிகளில் மே 2026 நிலவரப்படி காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பணியிட விவரங்களைச் சேகரிக்கப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான முதற்கட்டப் பணிகளை பள்ளிக் கல்வித் துறை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் குறித்த துல்லியமான விவரங்களைச் சேகரிக்க பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், வரும் மே 31, 2026 அன்றைய நிலவரப்படி, பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்துப் பாடப் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் பணியிட விவரங்களைப் பட்டியலிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விவரங்களை மே மாதம் 20-ஆம் தேதிக்குள் பள்ளிக் கல்வி இயக்ககத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு (c3supdtdse@gmail.com) அனுப்பி வைக்க வேண்டும். மின்னஞ்சல் மட்டுமன்றி, அதன் நகலை முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பத்துடன் விரைவு அஞ்சல் வழியாகவும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
காலிப்பணியிட விவரங்களைப் பட்டியலிடும்போது மிகவும் கவனமாக இருக்குமாறு கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, பணியாளர் நிர்ணயத்தின்படி ஆசிரியர்கள் இன்றி உபரி என கண்டறியப்பட்டு, இயக்குநரின் பொதுத் தொகுப்புக்கு ஒப்படைக்கப்படும் பணியிடங்களை எக்காரணத்தைக் கொண்டும் காலிப்பணியிடங்களாகக் காட்டக்கூடாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதேபோல், கூடுதல் தேவை உள்ள பள்ளிகளின் பெயர்களையும் காலிப்பணியிடப் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்று அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அரசு மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் குறித்த விவரங்களையும் சேகரிக்கத் துறை திட்டமிட்டுள்ளது. ஜனவரி 31, 2026 நிலவரப்படி உள்ள தலைமை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை மே 15-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை விரைந்து கண்டறிந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment