Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Monday, August 17, 2026

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TET விலக்கு? நாடாளுமன்றத்தில் அமைச்சர் அளித்த பதில்

பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமிக்க ஆசிரியர்களை மீண்டும் TET தேர்வு எழுத வற்புறுத்துவதன் நியாயம் குறித்தும், அவர்களுக்கு விலக்கு அளிக்க அரசு முன்வருமா என்றும் அவர் வினவினார்

பணியில் உள்ள பழைய ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆசிரியர்கள் சங்கத்தினர் தொடர்ச்சியாக எழுப்பி வருகின்றனர். பழைய ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் இதற்காகத் தமிழக அரசு மத்திய அரசுக்குத் தகுந்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் இதற்கான உரிய சட்டத்திருத்தத்தைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தது. 

மேலும், 'அகில பாரதிய ராஷ்டிரிய ஷைக்ஷிக் மகாசங்' (ABRSM) என்ற தேசிய அளவிலான ஆசிரியர் அமைப்பு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய கல்வி அமைச்சககத்துக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதியிருந்தது.


இந்தச் சூழலில், நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் இஷா கான் சவுத்திரி இதுகுறித்து கேள்வி எழுப்பினார்.

அவர், தனது கேள்வியில்,"மேற்கு வங்கம் உட்பட நாட்டில் உள்ள ஏராளமான தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளி ஆசிரியர்கள், பல ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்கள் மீண்டும் தகுதித் தேர்வை எழுத எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்து அரசு அறிந்து வைத்துள்ளாதா? பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு மீண்டும் டெட் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரி, ஆசிரியர் சங்கங்கள் அல்லது பிற தொடர்புடைய அமைப்புகளிடமிருந்து அரசுக்கு ஏதேனும் கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றுள்ளனவா? 

அனுபவமிக்க, பணியிலுள்ள ஆசிரியர்களை மீண்டும் டெட் தேர்வு எழுத வைப்பதன் அவசியத்தன்மை, நியாயப்பாடு மற்றும் தர்க்கரீதியான காரணம் குறித்து ஆசிரியர்கள் எழுப்பியுள்ள கவலைகளை அரசு ஆய்வு செய்துள்ளதா?  பணியில் உள்ள ஆசிரியர்கள் மீண்டும் டெட் தேர்வு எழுத வேண்டியதில்லை என்பதை உறுதிசெய்ய, உரிய வழிகாட்டுதல்கள் அல்லது உத்தரவுகளைப் பிறப்பிப்பது உள்ளிட்ட தகுந்த நடவடிக்கைகளை எடுக்க அரசு உத்தேசித்துள்ளதா? ஆம் எனில், அதன் விவரங்கள் யாவை? இல்லை எனில், அதற்கான காரணங்கள் யாவை? என்று கேட்டிருந்தார்.




இதற்கு மத்திய கல்வித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சௌத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், " கல்வி அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் வருவதால், ஆசிரியர்களின் நியமனம் மற்றும் பணி நிலைமைகள் ஆகியவை அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் நிர்வாக வரம்பிற்குள் வருகின்றன.


மேலும், தனது பதிலில், "உச்ச நீதிமன்றம் தனது 01.09.2025 தேதியிட்ட தீர்ப்பில், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்23-வது பிரிவின்படி, பள்ளிகளில் ஆசிரியராக நியமிக்கப்படுவதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும்  தகுதித் தேர்வு என்பது கட்டாயமான குறைந்தபட்ச தகுதியாகும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. 

எனினும், உச்ச நீதிமன்றம் 29.05.2026 தேதியிட்ட சீராய்வு மனுவில், கல்வி உரிமை சட்டத்திற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் 2028ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு முன் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 

மேலும், தகுதியான ஆசிரியர்கள் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தகுதியைப் பெறுவதற்கு ஏதுவாக, சம்பந்தப்பட்ட அரசுகள் ஆண்டுக்கு இருமுறை டெட் தேர்வுகளை நடத்த முயற்சி எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.


No comments:

Post a Comment

LightBlog