வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணிகள் இன்று தொடங்கியிருக்கும் நிலையில் இந்த பணிகள் எப்படி நடைபெறும்? என்னென்ன ஆவணங்கள் கணக்கில் கொள்ளப்படும்? என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 2025, அக்டோபர் இறுதி வாரம் முதல் 2026, பிப்ரவரி முதல் வாரம் வரை நடைபெறவுள்ள இச்சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகள் முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வரை ஏறக்குறைய 77,000 அதிகாரிகள் பணிபுரிவர்.
தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்தார். வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும் ஒரு செயல்முறையாக சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். இதன்மூலம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படுவதுடன், இறந்தவர்கள், வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்தவர்கள், பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை இடம் பெற்றுள்ள போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என அவர் கூறினார்.
ஏன் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்?
சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (Special Intensive Revision - SIR) என்பது ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள், ஒரு பகுதியின் வாக்காளர் பட்டியலை முழுமையாகவும், துல்லியமாகவும், பிழைகள் இல்லாமலும் திருத்தி அமைப்பதற்காக இந்தியத் தேர்தல் ஆணையத்தால் (ECI) மேற்கொள்ளப்படும் ஒரு முக்கியமான பணியாகும்.
நியமிக்கப்படும் அதிகாரிகளின் பணி
தொடர்ந்து பேசிய அவர் சராசரியாக ஒவ்வொரு ஆயிரம் வாக்காளர்களுக்கும் ஒரு வாக்குச்சாவடி உள்ள நிலையில், இந்த ஒவ்வொரு வாக்கு சாவடிக்கும் நிலை அலுவலர் நியமிக்கப்படுவார் என்று தெரிவித்தார். புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான படிவம் 6ஐ சேகரித்து அவற்றை பட்டியலுடன் இணைக்க உதவி செய்வது, படிவத்தை பூர்த்தி செய்ய வாக்காளர்களுக்கு உதவுவது, ஒவ்வொரு வாக்காளரின் வீட்டிற்கும் குறைந்தது மூன்று முறை செல்வது போன்ற பணிகளை இந்த அலுவலர் மேற்கொள்வார். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு தேர்தல் பதிவு அலுவலர் நியமிக்கப்படுவார் என்றும் அவர் வரைவு வாக்காளர் பட்டியலை தயாரிப்பது, ஆட்சேபனைகள் மீது முடிவு எடுப்பது, இறுதி வாக்காளர் பட்டியலை தயாரித்து வெளியிடும் பணிகளை தேர்தல் பதிவு அலுவலர் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
SIR பணிகள் எவ்வாறு நடைபெறும்
வாக்காளர் பட்டியலின் ஆரம்ப வரைவு வெளியிடப்படும். பின்னர் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, குடும்பத் தலைவருடன் கலந்துரையாடிப் பட்டியலைச் சரிபார்ப்பர். வரைவுப் பட்டியல் மீது பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆட்சேபனைகள் (நீக்குதல்) அல்லது கோரிக்கைகள் (சேர்த்தல்/திருத்தம்) அளிப்பதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்படும். பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் அதிகாரிகள் மூலம் மீண்டும் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு, நிராகரிக்கப்பட வேண்டியவற்றுக்கு உரிய காரணங்கள் தெரிவிக்கப்படும். அனைத்துத் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்ட பின், இறுதி மற்றும் துல்லியமான வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
வீடு தோறும் கணக்கீடு
அடுத்த மாதம் (நவம்பர்) 4-ந்தேதி முதல் டிசம்பர் 4-ந்தேதி வரை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு தோறும் சென்று, தற்போதைய வாக்காளர்களுக்கு முன்பே நிரப்பப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை விநியோகித்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை மீண்டும் சேகரிப்பார்கள். அப்போது, அங்கு இல்லாதவர்/ இடம் மாறியவர்/ இறந்தவர்/ இரட்டைப் பதிவுகள் ஆகியவற்றை அடையாளம் காண்பதுடன், புதிய தகுதியுள்ள வாக்காளர்களின் விவரங்களையும் சேகரிப்பார்கள்.
எந்தவொரு வாக்காளரும் விடுபடக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைப் பெறுவதற்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஒவ்வொரு வீட்டுக்கும் குறைந்தது மூன்று முறை செல்லுவார். மேலும், தற்போதைய வாக்காளர்களுக்கு இணையதளம் வழியாக முன்பே நிரப்பப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களையும் ஆவணங்களையும் பதிவேற்றும் வசதியும் வழங்கப்படும்.
தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன?
தீவிர வாக்காளர் திருத்த பணிகளுக்காக ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அடையாள அட்டையை ஆவணமாக கொடுக்கலாம். இந்திய அரசால் கொடுக்கப்பட்ட அடையாள அட்டை அல்லது சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட், கல்விச் சான்றிதழ்கள், நிரந்தர வசிப்பிடச் சான்றிதழ், வன உரிமைச் சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றை ஆவணங்களாக அளிக்கலாம்.
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிலம் அல்லது வீட்டிற்கான ஒதுக்கீடு சான்றிதழ், உள்ளூர் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட குடும்ப பதிவேட்டை அளிக்கலாம் எனக் கூறிய தேர்தல் ஆணையம் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் சான்றிதழ் மற்றும் ஆதார் அடையாள அட்டையை பொருந்தும் இடங்களில் ஆவணமாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதாரை பிறப்புச் சான்றிதழாக கருத முடியாது என தெரிவித்த தேர்தல் ஆணையம் ஆதார் அட்டையை அடையாள அட்டையாக அளிக்கலாம் என கூறியுள்ளது.
தமிழகத்தில் ‘எஸ்.ஐ.ஆர்.’ தொடங்குவதால் 6 முக்கிய அம்சங்களை கவனிக்க வேண்டி உள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
* வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்கள் பெயர்கள் முழுமையாக நீக்கப்படும்.
* 2 தொகுதிகளில் பெயர் இருந்தால், அதில் ஒரு தொகுதியின் பெயர் நீக்கப்படும்.
* ஒரு வாக்காளர் எங்கு குடியிருக்கிறாரோ, அந்த சட்டசபை தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில்தான் அவரது பெயர் இருக்க வேண்டும். மாறாக சொந்த ஊரில், அவரது பெயர் இருந்தால் அது நீக்கப்படும். எனவே சென்னை உள்பட நகரங்களில் வசிப்பவர்கள் தங்களது பெயரை சொந்த ஊரில் இருந்து நீக்கி வசிக்கும் இடத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் நிலை உருவாகும்.
* வேறு தொகுதி அல்லது வேறு மாவட்டங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள் வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி மாற்றம் செய்து கொள்ளவேண்டும்.
* தமிழகத்தில் வேலை பார்க்கும் பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தின் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.
* பீகார், வங்காளதேசம் எல்லையை ஒட்டி இருப்பதால் ஏராளமான வங்காளதேசத்தினர் வாக்காளர் பட்டியலில் இருந்தனர். அவர்கள் பெயர்கள் ‘எஸ்.ஐ.ஆர்.’ மூலம் தற்போது நீக்கப்பட்டு உள்ளது. அதேபோல தமிழகத்தில் இலங்கையில் இருந்து அகதிகளாக வந்தவர்கள் இருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்ந்து இருந்தால் நீக்கப்படுவார்கள்.
 
No comments:
Post a Comment