அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ ஜியோ) சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
திருச்சியில் நடைபெற்ற உயர்மட்டக்குழு கூட்டத்தில் நவம்பர் 18-ந்தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கும் மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பினை 5 சதவீதமாக குறைக்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக வழங்கிட வேண்டும். 21 மாத ஊதியமற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுப்பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளதை வழங்க வேண்டும்.
2002-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களின் பணிக் காலத்தை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன் முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்.
1.4.2003-க்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.
சென்னையில் சேப்பாக்கம் எழிலகம் வளாகத்திலும் மற்ற மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகம் அருகிலும் இப்போராட்டம் நடைபெற்றது. வேலைநிறுத்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்கக்கூடாது, அது அங்கீகரிக்கப்படாத விடுப்பாக கருதப்படும் என்றும் வேலை செய்யாத நாளுக்கு ஊதியம் இல்லை எனவும் போராட்ட விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்து உள்ளது.
ஆனாலும் அதனை மீறி சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களி லும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் இப்போராட் டம் நடந்தது.
சென்னையில் தலைமை செயலகம், எழிலகம், குறளகம், வணிக வரி அலுவலகம், சைதாப்பேட்டை பனகல் மாளிகை, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு துறை அலுவலகங்களில் ஊழியர்கள் குறைவாகவே பணிக்கு வந்தனர். இதனால் அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டன. இதேபோல ஆசிரியர்களும் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்செயல் விடுப்பு கடிதம் கொடுக்காமல் பெரும்பாலானவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
சென்னை எழிலகத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன், சுரேஷ், காந்திராஜன் ஆகியோர் தலைமையில் அரசு ஊழியர்கள் திரண்டு கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் சேப்பாக்கம் அரசு அலுவலக பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மெரினா காமராஜர் சாலை நுழைவு பகுதியில் முன் எச்சரிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளரும் தலைமை செயலக சங்க தலைவருமான வெங்கடேசன் கூறியதாவது:-
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. பல்வேறு கட்ட போராட்டங்கள், பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரையில் எந்த பயனும் இல்லை. இன்றைய போராட்டத்தில் சுமார் 6 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள்.
இதனால் அரசு அலுவலக பணிகள், பள்ளிகளில் கற்றல் பணி பாதிக்கக்கூடும். எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் தீவிரமாகும்.

No comments:
Post a Comment