ஆசிரியர்களாக பணியாற்றும் அனைவரும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து தமிழக அரசு பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித்தேர்வு நடத்த உள்ளது.
இதற்கிடையே, இந்த சிறப்பு தகுதித்தேர்வு குறித்து தமிழ்நாடு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு, பணியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித்தேர்வு நடத்த இருப்பது வரவேற்கத்தக்கது. இந்த தேர்வுக்கான மொத்த மதிப்பெண் 100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் அவரவர் நடத்தும் பாடங்களில் இருந்து 60 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம் பெற வேண்டும்.
தமிழகத்தில் முதன்முறையாக கடந்த 2012-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. அதன்படி, ஆசிரியர்களின் வயது மற்றும் பணி அனுபவத்தை கணக்கில் கொண்டு அதற்காக 20 மதிப்பெண்கள் வழங்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் மற்றும் பொது அறிவு ஆகிய தேர்வுகளுக்கு 20 மதிப்பெண் வழங்க வேண்டும்.
முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்று, பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருபவர்களுக்கு தகுதித்தேர்வில இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும். கட்டாய இலவச கல்வி உரிமைச்சட்டத்தின் படி, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மட்டுமே ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த வேண்டும். எனவே, இந்த சிறப்பு தகுதித்தேர்வில் மேற்கண்ட வகுப்பு வரையிலான பாடங்களில் இருந்து மட்டும் கேள்விகள் கேட்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment