ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாமல் பள்ளிகளில் பணியில் இருக்கும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் அதில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. இந்த தேர்வை எழுத சுமார் 1.76 லட்சம் ஆசிரியர்கள் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வினை ஆண்டுக்கு மூன்று முறை நடத்த வேண்டும். அந்த வகையில் ஜனவரி மாதத்திற்கான அறிவிப்பு நேற்று வெளியானது. ஆனால் காலையில் வெளியான அறிவிப்பு மாலையில் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்கும் நோக்கத்துடன் கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின்படி 8 ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி வழங்க மத்திய அரசு நிதியுதவி வழங்கி வருகிறது.
ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம்
எனவே, எட்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கக் கூடிய இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெற்றி பெறுவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இந்தச் சட்டம் 2011 -12ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, 2012-ம் ஆண்டு முதல் இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்களே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.
இடைநிலை ஆசிரியர்கள்
ஆனால் 2011ம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு போட்டிதேர்வுகளின் மூலம் வென்று தேர்வான, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? என்ற கேள்வி இருந்தது. ஆனால் கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திரக்கிறது. அடுத்த இரு ஆண்டுகளில் தகுதித்தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு காரணமாக தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்ரா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், டெல்லி, மத்திய பிரதேசம் உள்பட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பல லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளில் தேர்ச்சி பெறாமல் போனால், அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். அதாவது கட்டாய ஓய்வளிக்கப்படுவார்கள். நாடு முழுவதும் பல லட்சம் ஆசிரியர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்,
1.76 லட்சம் ஆசிரியர்கள்
தமிழ்நாட்டை பொறுத்தவரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் 1 லட்சத்து 76 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வை எழுத வேண்டிய நிலையில் இருக்கின்றனர். இதுதவிர இதேபோல் தனியார் பள்ளிகளில் பணியாற்றுவோரில் சுமார் 2 லட்சம் பேர் தகுதி தேர்வில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வெற்றி பெறாவிட்டால் வேலையை இழக்க நேரிடும் என்கிற நிலையில் இருக்கிறார்கள்.
மூன்று முறை தேர்வு
இந்த சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வை ஆண்டுக்கு 3 முறை நடத்த திட்டமிட்ட தமிழக அரசு, அதுதொடர்பான அறிவிப்பையும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதன்படி, ஜனவரி, ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில் ஜனவரி மாதத்துக்கான தேர்வு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும்? என ஆசிரியர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், அதுதொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் நவம்பர்19ம் தேதியான நேற்று காலையில் வெளியிட்டிருக்கிறது.
காலையில் அறிவிப்பு மாலையில் வாபஸ்
அதில் சிறப்பு தகுதித்தேர்வு தாள்-1 தேர்வு அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் 24-ந் தேதியும், தாள்-2 தேர்வு 25-ந் தேதியும் நடைபெறும் என்றும், இதற்கு இன்று (வியாழக்கிழமை) முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 20-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த அறிவிப்பு நவம்பர் 19ம் தேதியான நேற்று பிற்பகலில் வாபஸ் பெறப்பட்டது. முறையான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏன் வெளியிடப்பட்டது. ஏன் காலையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. பிற்பகலில் வாபஸ் பெறப்பட்டது என்பது குறித்த தெளிவான காரணங்கள் இல்லை.

No comments:
Post a Comment