S.I.R நடப்பும்! எதிர்ப்பும்!! நாம் செய்ய வேண்டியதும்!!! (பகுதி 1)
_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_
நான் - நீங்கள் - நாம் இந்தியக் குடிமகன் / குடிமகள் தானா என்பதை அரசிற்கு உறுதிப்படுத்தும் அதிமுக்கிய நடவடிக்கையாக Special Intensive Revision (SIR) எனும் சிறப்புத் தீவிர திருத்தப் பணியை பீகாரைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் 04.11.2025 முதல் தொடங்கியுள்ளது இந்தியத் தேர்தல் ஆணையம்.
1951 முதல் 2002 வரை 8 முறை சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பினும், நடந்து முடிந்த பீகார் SIRல் ~69,00,000 வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியதன் வழியே இந்த SIR2025 நாடு முழுவதும் பதற்றத்தைப் பற்ற வைத்துள்ளது. பீகாரில் நீக்கியவர்களை தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் சேர்த்துக்கொள்ளும் வாய்ப்பையும் வழங்கியுள்ளதால், மாநில - மக்கள் உரிமை சார்ந்து சிந்திக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன.
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தனக்கென தனித்த பண்பாட்டு & அரசியல் கூறுகளைக் கொண்டிருக்கின்றன. அதனை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு சார்ந்த மாநில மக்களையே சார்ந்துள்ளது. தொழில் நிமித்தம் மாநிலம் தாண்டி கூட்டம்கூட்டமாகப் புலம்பெயர்வோருக்கு அங்கு வாக்குரிமை வழங்குவதால் அத்தகைய கூறுகளில் குறிப்பாக மாநில அரசியலில் விரும்பத்தகாத தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதே SIR2025ஐ எதிர்க்கும் அரசியல் கட்சிகளின் முதன்மைக் குரலாக உள்ளது.
அடுத்ததாக, பிறந்த நாள் & இடத்தை உறுதிசெய்ய SIR2025 முன்வைக்கும் ஆவணங்கள் அவ்வளவு எளிதானவை அல்ல என்பதும், இதனால் இந்தியக் குடிமக்கள் அநேகரது வாக்குரிமை பறிபோக வாய்ப்புள்ளதாகவும் பீகார் SIRஐ முன்வைத்து அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
SIRஆல் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால். . ., 'ஓட்டுப் போடலேனா போயிட்டு போவுது, நான் இந்தியன் இல்லைனு சொல்லீற முடியுமா?' என்றால். . சொல்ல முடியாது என்று உறுதிபடச் சொல்லிவிட முடியாது. நாளை எதுவேண்டுமானாலும் நடக்கலாம். ஏனென்றால் SIR2025 முன்வைக்கும் விதிகள் & தேதிகள் முழுக்க முழுக்க டிசம்பர் 2019ல் திருத்தப்பட்ட 'இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955 (Act No.57 of 1955)' சார்ந்தவையே.
ஆம். 12.12.2019ல் கொண்டுவரப்பட்ட Citizenship Amendment Act (CAA)ன் படி NRC (National Register of Citizens) பதிவேடு தயாரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டன. இதில் இந்தியக் குடிமக்களின் குடியுரிமையே கேள்விக்குரியானதாகக் குறிப்பிட்டு நாடு தழுவிய CAA எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன / தொடரப்படவில்லை. தற்போதைய SIRன் வழியே மறைமுகமாக CAA நாடு முழுமைக்கும் விரிவுபடுத்தப்பட்டு அநேக இந்தியக் குடிமக்களின் குடியுரிமை கேள்விக்குள்ளாக்கப்பட நேரிடும் என்பதும் பெருவாரியான அரசியல் கட்சிகளின் SIR எதிர்ப்பிற்குக் காரணமாக உள்ளது.
-~~~~~~~~~~~~~~~-
என்ன சொல்கிறது இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955 (Act No.57 of 1955) :
THE CITIZENSHIP ACT, 1955ல் பல்வேறு சேர்க்கைகள் / மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி The Citizenship (Amendment) Act 2003 (Act 6 of 2004), Act 2005 (Act 32 of 2005), Act 2015 (Act 01 of 2015) என்று அடுத்தடுத்து புதுப்பிக்கப்பட்டு, 12.12.2019ல் இறுதியாக Act 2019 (Act 47 of 2019) சேர்க்கப்பட்டு THE CITIZENSHIP ACT, 1955 (Act No.57 of 1955) இறுதி செய்யப்பட்டதன் அடிப்படையில் அதன் 3வது சரத்து ஒருவரை இந்தியக் குடிமகன் தான் என்பதை அவரது பிறப்பின் அடிப்படையில் பின்வருமாறு உறுதி செய்கிறது.
1. 1.7.1987ற்கு முன் பிறந்திருக்க வேண்டும்.
2. 1.7.1987 முதல் 1.12.2004 வரை பிறந்தவர் எனில் அவரது தாய் / தந்தை இந்தியராக இருந்தல் வேண்டும்.
3. 2.12.2004ற்குப் பின் பிறந்தவர் எனில் அவரது தாய் & தந்தை இருவருமே இந்தியராக இருந்தல் வேண்டும்.
இந்த 3 விதிகளின் அடிப்படையில் தான் SIR2025க்கான நிர்ணய தேதியை இ.தே.ஆ வகைப்படுத்தியிருக்கிறது.
-~~~~~~~~~~~~~~~-
SIR2025க்கான வரையறைத் தேதிகள் என்னென்ன?
04.11.2025ல் தொடங்கப்பட்டுள்ள SIR2025 Phase-II மூன்று முக்கிய தேதிகளை வரையறுத்து அதைபொறுத்தே ஒவ்வொரு வாக்காளரும் தான் இந்தியரா? / இந்தியப் பெற்றோருக்குப் பிறந்தவரா? என்பதை உரிய ஆவணங்களின் வழியே தனக்கு உறுதிப்படுத்த வேண்டுமென இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
1) ஜூலை 1, 1987 :
THE CITIZENSHIP ACT 1955 குறிப்பிட்டிருந்த 01.07.1987 தேதிய இந்தியக் குடியுரிமை அடிப்படையில் 2002 - 2004 காலகட்டத்தில் இறுதியாக SIR நடத்தப்பட்டது. புகாரின் பேரில் தமிழ்நாட்டின் 37 தொகுதிகளில் மட்டும் 2005ல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அதன் படியான இறுதித் தீவிரத் திருத்த வாக்காளர் பட்டியல் SIR 2002 தான் தற்போதைய SIRக்கான முதன்மை ஆவணம்.
இந்தப் பட்டியலில் பெயர் உள்ளோர் அதாவது 01.07.1987க்கு முன்னர் பிறந்து 2002ல் 18 வயது பூர்த்தியடைந்து அப்போது வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்ட வாக்காளர்கள் தற்போது தங்களது குடியுரிமையை மெய்ப்பிக்க புதிதாக எந்த ஆவணமும் அளிக்கத் தேவையில்லை. SIR 2002 பட்டியலில் உள்ள பாகம் எண் & வரிசை எண் உள்ளிட்டவற்றை BLO வழங்கும் Enumeration Formல் அளித்தால் போதும்.
2) ஜூலை 1, 1987 - டிசம்பர் 1, 2004 :
தாய் தந்தை இருவரில் யாரேனும் ஒருவர் இந்தியராக இருந்தால் மட்டுமே 01.07.1987 முதல் 01.12.2004 வரை பிறந்தவர்களை இந்தியக் குடிமகனாக அங்கீகரிக்க முடியும் என்கிறது THE CITIZENSHIP ACT 1955 (57 of 1955).
இதன்படியே மேற்படி காலகட்டத்தில் பிறந்தவர்கள் தங்களது தாய் / தந்தையின் பெயர் SIR2002ல் இருப்பின் அதனை BLO வழங்கும் Enumeration Formல் குறிப்பிட வேண்டும் என SIR2025ல் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதலாகத் தனது பிறந்த தேதி / இடத்திற்கான ஆவணத்தையும் தயாராக வைத்திருக்கக் கூறிப்பிடப்பட்டுள்ளது.
3) டிசம்பர் 2, 2004க்குப் பின் :
THE CITIZENSHIP ACT 1955 (57 of 1955) தாய் & தந்தை இருவருமே இந்தியராக இருந்தால் மட்டுமே 02.12.2004க்குப் பின்னர் பிறந்தவர்களை இந்தியக் குடிமகனாக அங்கீகரிக்க முடியும் என்கிறது.
எனவே SIR2025, 02.12.2004க்குப் பின்னர் பிறந்தவர்கள் தாய் & தந்தை இருவரின் பெயரையும் SIR2002ல் இருந்து எடுத்து BLO வழங்கும் Enumeration Formல் குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதலாகத் தனது பிறந்த தேதி / இடத்திற்கான ஆவணத்தையும் தயாராக வைத்திருக்கக் கூறிப்பிடப்பட்டுள்ளது.
-~~~~~~~~~~~~~~~-
அந்த. . . SIR2002 எங்கு & எப்படிக் கிடைக்கும்?
உங்களது இல்லம் தேடி Enumeration Form கொண்டு வரும் BLO வைத்திருப்பார்.
அதுவரை காத்திருக்க முடியாது என்றால்,
https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
என்ற தளத்தில் சென்று 2002ல் உங்களது பெயர் இருந்த மாவட்டம், சட்டமன்றத் தொகுதி & வாக்குச்சாவடியைத் தேர்வு செய்து PDFஆகத் தரவிறக்கிக் கொள்ளலாம்.
https://erolls.tn.gov.in/electoralsearch/
என்ற தளத்தில் சென்று பெயர் / வாக்காளர் அடையாள அட்டையின் வழி தேடி பெயரை உறுதி செய்து கொள்ளலாம். பலருக்கு வாக்காளர் எண் இடம்பெறவில்லை என்பதால் PDF வழி தேடுவதே நல்லது.
-~~~~~~~~~~~~~~~-
SIR 2002ல் பெயரே இல்லை எனில், என்ன செய்வது?
மேற்படி 3 காலகட்டங்களுக்கு உட்பட்டோர் தமது / தமது பெற்றோரின் பெயர் SIR 2002ல் இல்லையெனில், சார்ந்தோரின் பிறந்த தேதியையும் இடத்தையும் மெய்ப்பிக்க 13 வகையான ஆவணங்களைப் பட்டியலிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.
இதில் 12வது ஆவணமான ஆதார் அட்டை ச்சும்மா பெயருக்காக மட்டுமே. இது அடையாள ஆவணம் மட்டுமே; குடியுரிமைக்கான ஆவணம் அல்ல என்பதை அந்த ஆதார் அட்டையிலேயே போட்டிருப்பாங்க. நாம அதைப் படிச்சிருக்க வாய்ப்பு குறைவே. (இதுக்கு எதுக்குடா பிறப்பு - இறப்பு வரை அம்புட்டுக்கும் அத்தையே ஆதார ஆவணமா கேக்குறீகனுலாம் கேக்கப்படாது.)
அப்பறம் அந்த 13வது வேறொன்னுமில்ல பீகார் SIR தான். (நான் எதுக்குடா நடுராத்திரில சுடுகாட்டுக்கு போகனும்னு கேட்கத்தோனும். தோனட்டும். . . . தோனட்டும். . . .)
இது உங்களுக்கில்லை; பீகாரில் நீக்கப்பட்ட 69,00,000 பேரில் தமிழ்நாட்டில் வேலை செய்வோரை இங்கு வாக்காளராகச் சேர்ப்பதற்கான ஆவணம். அவுக அப்பா அம்மா பேரு அங்க (பீகார் SIRல்) இருந்தா இவுகள இங்க சேர்த்துக்கலாம். ஏனெனில் பீகார் SIRல் உள்ளோர் மட்டும்தான் இன்றைய தேதியில் இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள இந்திய குடிமக்கள். அந்த இந்தியக் குடிகளின் மக்களும் இந்தியக் குடிமக்கள் தானே!
-~~~~~~~~~~~~~~~-
பிறந்த தேதி / பிறப்பிடத்திற்கான 11 வகையான ஆவணங்கள் :
1. அரசு / பொதுத்துறை ஊழியர் (/ ஓய்வூதியர்) அடையாள அட்டை
2. 01.07.1987க்கு முன் பெறப்பட்ட அரசு / வங்கி / அஞ்சலகம் / LIC அலுவலகம் வழங்கிய ID Card / Certificate / Documents
3. பிறப்புச் சான்றிதழ்
4. கடவுச்சீட்டு (Passport)
5. SSLC Marksheet / Degree Certificate
6. நிரந்தர வசிப்பிடச் சான்று (Nativity Certificate)
7. பழங்குடியினருக்கான வன உரிமைச் சான்றிதழ்
8. சாதிச் சான்றிதழ்
9. தேசிய குடிமக்கள் பதிவேடு
10. குடும்பப் பதிவேடு
11. அரசு நில ஒதுக்கீட்டுச் சான்றிதழ்
மேற்கண்ட 11ல் ஏதாவது ஒன்றின் வழியே உங்களது / பெற்றோரது பிறந்த தேதி & பிறப்பிடத்தை மெய்ப்பிக்க வேண்டும்.
இதனை,
- எப்போது?
- எப்படி?
- யாரிடம் மெய்ப்பிக்க வேண்டும்?
- மெய்ப்பிக்காவிட்டால் என்னவாகும்?
என்பது குறித்து அடுத்த பதிவில் இயன்றவரை தெளிவாகத் தர முயற்சிக்கிறேன்.
முழுமையாகப் படித்தமைக்கு நன்றி! மக்கள் நலன் கருதி இயன்றவரை பகிரவும் - பயிற்றுவிக்கவும் முயற்சியுங்கள்.

No comments:
Post a Comment