வகுப்பறையில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறதா 'திறன்' திட்டம் ? - Asiriyar.Net

Saturday, November 8, 2025

வகுப்பறையில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறதா 'திறன்' திட்டம் ?

 



அரசு பள்ளிகளில் நடைமுறையில் உள்ள 'திறன்' திட்டத்தில் சுமாராக படிக்கும் மாணவர்களை தனியாக பிரித்து பாடம் நடத்தும் முறையால் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது என சர்ச்சை எழுந்துள்ளது.


அரசு பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடத் திறன், கணிதத் திறனை மேம்படுத்த 'திறன்' திட்டம் ஜூலை முதல் நடைமுறையில் உள்ளது. இதன் அடிப்படையில் ஒரு வகுப்பில் சுமாராக படிக்கும் (ஸ்லோ லேர்னர்ஸ்) மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தவும், பிரத்யேக பயிற்சி புத்தகம் வழங்கியும் கற்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 10 ஆயிரம் மாணவர் இப்பிரிவில் உள்ளனர். இவர்களுக்கு காலாண்டு தேர்வில், தனி வினாத்தாள் வழங்கப்பட்டது. அத்தேர்வில் அவர்களின் கற்றல் அடைவுத் திறனை ஆய்வு செய்தபோது எதிர்பார்த்த 'ரிசல்ட்' கிடைக்கவில்லை.


மனரீதியாக பாதிப்பு இதனால் இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக சுமாராக படிக்கும் மாணவர்களை தனியாக பிரித்து தனி வகுப்பாக நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ஒரே வகுப்பில் உள்ளவர்களை 'ரெகுலர்' மாணவர், 'திறன்' மாணவர் என பள்ளிகளில் அழைக்கப்படுகின்றனர். அவர்களுக்கான பாடவேளைகள், ரேங்க் கார்டு தயாரிப்பு, மதிப்பெண்களை தனியாக 'எமிஸ்'ல் பதிவேற்றம் செய்வது என ஆசிரியர்களுக்கும் பணிச்சுமை அதிகரித்துள்ளது.


ஒரே ஆசிரியர் இரு தரப்பு மாணவருக்கும் தனித்தனியாக இரண்டு முறை பாடம் நடத்த வேண்டியுள்ளது. இந்த நடைமுறை வகுப்பறையில் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. அவர்களை 'திறன்' மாணவர் என அழைப்பதால் மனரீதியான பாதிக்கின்றனர் என சர்ச்சையும் எழுந்துள்ளது.


ஆசிரியர்கள் அலைக்கழிப்பு ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:இதுபோன்ற திட்டங்களுக்கு ரூ. பல கோடி ஒதுக்கப்படுகிறது. கமிஷனுக்காக பல திட்டங்கள் கல்வித்துறையில் கொண்டுவரப்படுகின்றன. சில திட்டம் வருவதும் தெரியாது. முடிவதும் தெரியாது.


'திறன்' மாணவர் என பிரித்துவிட்டு, அதற்கான பயிற்சி புத்தகங்களை ரெகுலர் மாணவர்களுக்கும் வழங்கியுள்ளனர். இதுவரை 9ம் வகுப்பு மாணவருக்கு இப்புத்தகம் கிடைக்கவில்லை.


ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் உறைவிடப் பயிற்சி என்ற பெயரில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆசிரியர்களை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரச்சொல்லி அலைக்கழிக்கப்படுகின்றனர். இதுபோல் சேலம், திருச்சி, நீலகிரி மையங்களுக்கு தொலைதுார மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தொடக்க, உயர்நிலை பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ள நிலையில், 'திறன்' மாணவர்களுக்கு கற்பிக்க தனியாகவும் ஆசிரியர் நியமிக்கவில்லை. இதுபோன்ற பிரச்னைகளை இத்திட்டத்தில் களைய அதிகாரிகள் முன்வரவேண்டும் என்றனர்.




No comments:

Post a Comment

Post Top Ad