TET தேர்ச்சி பெற்ற 2500 ஆசிரியர்களுக்கு உடனடி பணி நியமனம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - Asiriyar.Net

Wednesday, September 3, 2025

TET தேர்ச்சி பெற்ற 2500 ஆசிரியர்களுக்கு உடனடி பணி நியமனம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

 



ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்வான, 2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, உடனடி பணி நியமனம் வழங்க அனுமதி அளித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு, நேரடி தேர்வு நடத்தி, 2500 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படவில்லை.


பட்டதாரி ஆசிரியர்களின் நேரடி நியமனத்தை எதிர்த்து, ஆசிரியர் அல்லாத பணியில் இருப்போர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில், தங்களுக்கு வழங்க வேண்டிய, 2 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்காமல், மற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கக் கூடாது, என, தெரிவிக்கப்பட்டது.


இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 'ஆசிரியர் அல்லாத பணி இடங்களில் உள்ளவர்களுக்கான, 2 சதவீத இடத்தை நிரப்பாமல், நேரடி தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட, 2500 பேரை பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்யக்கூடாது' என, இடைக்கால தடை விதித்தார்.


இந்த இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து, நேரடி பணி நியமனத்துக்கு தேர்வானவர்கள், மேல் முறையீடு மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஹேமந்த் சந்திரகவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.


அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் தாட்சாயினி ரெட்டி, ''2500 பேர் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு பணி நியமனத்துக்காக காத்திருக்கின்றனர். தனி நீதிபதியின் உத்தரவால் அவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால், அந்த உத்தரவை ரத்து செய்து, பணி நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும்,'' என, வாதிட்டார்.


தமிழக அரசின் சார்பில், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், அரசு சிறப்பு வழக்கறிஞர் மைத்ரேயி சந்துரு ஆகியோர் ஆஜராகி, 'தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் தயராக உள்ளது. 2 சதவீத ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த ஒதுக்கீட்டில் காலி இடம் இல்லை' என, வாதிட்டனர்.


பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:


நேரடி நியமனங்களுக்கான, 50 சதவீத இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, உரிய இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி, அரசு பணி நியமன உத்தரவுகளை உடனே வழங்கலாம். இந்த நியமனத்தில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கான விவகாரம் குறுக்கிட முடியாது. இது குறித்து, இறுதி விசாரணையில் முடிவு செய்யப்படும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது.


No comments:

Post a Comment

Post Top Ad