UPS - ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கான மத்திய அரசு கெடு முடிகிறது - தமிழகம் மவுனம் - Asiriyar.Net

Wednesday, September 24, 2025

UPS - ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கான மத்திய அரசு கெடு முடிகிறது - தமிழகம் மவுனம்

 



ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர்வதற்கான, மத்திய அரசின் கெடு, வரும் 30ம் தேதி நிறைவு பெறவுள்ள நிலையில், தமிழக அரசு அதை கண்டுகொள்ளாமல் உள்ளது.


மத்திய அரசு, 2003 முதல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை, அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆனால், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.


கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., ஆட்சி அமைந்தால், பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என, வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதை நம்பி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவளித்தனர். இதனால், தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஐந்தாண்டு கால ஆட்சி முடிய, இன்னும் ஏழு மாதங்கள் மட்டுமே உள்ளன.


ஆனால், பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு மீண்டும் நடைமுறைப்படுத்த ஆர்வம் காட்டவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபையில் பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய அரசு புதிதாக நடைமுறைப்படுத்த உள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.


இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றில் சிறந்ததை தேர்வு செய்து செயல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களிடம் கருத்து கேட்கப்பட்டது.


இந்த குழு அறிக்கை தாக்கல் செய்வதற்கு, வரும் 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. சங்கங்கள் அளித்த கோரிக்கைகளை தொகுத்து, அதில் எதற்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதை பட்டியலிடும் பணிகள், நிதித் துறை வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இதற்கு கால அவகாசம் தேவைப்படலாம் என தெரிகிறது. ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அரசு ஊழியர்கள், மாநில அரசுகள் தேர்வு செய்வதற்கான காலக்கெடுவும், அதே 30ம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது. ஆனால், இதுகுறித்து முடிவெடுக்காமல், மாநில அரசு மவுனம் காத்து வருகிறது.


இதுகுறித்து, அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:


ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர்வது குறித்து முடிவெடுத்து, இம்மாத இறுதிக்குள் அறிவிக்க வேண்டும். ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில், பல்வேறு வரிசலுகைகள் கிடைக்கும். எனவே, அதில் சேர்வதற்கு சில சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. காலக்கெடு முடிந்து விட்டால், அதில் சேர இயலாது.


பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், பழைய ஓய்வூதிய திட்டம் என்ற, இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இருக்கும். இதில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் வேண்டாம் என்பதே, பல சங்கங்களின் கோரிக்கை. எனவே, பழைய ஓய்வூதிய திட்டத்தை தான், தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும். இதனால், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினார்.


No comments:

Post a Comment

Post Top Ad