தமிழ்நாட்டில் விரைவில் 3,277 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தென்காசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு குறித்து கவலைப்பட வேண்டாம் என்றார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தென்காசி மாவட்டம் ஆய்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் வைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான அடைவுத் தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த 700-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதற்கு தலைமை வகித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "தமிழகம் முழுவதும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக அடைவு தேர்வு குறித்த சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தை தமிழகம் முழுவதும் 37 மாவட்டங்களில் இதுவரை நடத்தி முடித்துள்ளேன். கடைசியாக தென்காசியில் தற்போது 38வது மாவட்டமாக இன்று நடத்தி முடிக்கிறேன்.
ஆசிரியர்கள் என்பவர்கள் தங்கள் இல்லத்தில் உள்ள தமது குழந்தைகளையும் பார்த்து பின்னர் பள்ளிக்கு வந்து 40க்கும் மேற்பட்ட தமது மாணவர்களையும் பெற்றோர் போல் பேணிக் காப்பதே அவர்கள் கடமையாக உள்ளது. ஆசிரியர்களின் பணி அளப்பரிய பணி. ஆசிரியர்கள் சமீபத்தில் வெளிவந்த 'டெட் தேர்வு' குறித்த தீர்ப்பை நினைத்து பயப்பட வேண்டாம். அதனை பார்த்துக் கொள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய நான் இருக்கிறேன். அதனை நினைத்து கவலைப்பட தேவையில்லை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று பேசினார்.
தொடர்ந்து பேசியவர் "தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 8,388 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு 3227 ஆசிரியர்களை தேர்வு செய்ய விரைவில் அறிவிப்பு வெளியாகும். ஏற்கெனவே முதுநிலை ஆசிரியர்கள் 1200 பேர் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எங்கும் ஆசிரியர் இல்லாத நிலை வந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில் செயல்பட்ட வருகிறோம்” என்றார்.
முன்னதாக, இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.ரமேஷ், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணை இயக்குநர் குமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி, மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் திரளான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment