தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் - NCTE, 23 ஆகஸ்ட் 2010 இல் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் இடம் பெற்றுள்ள விதிகள் 4 மற்றும் 5 இன் அடிப்படையில் மறு சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் முன் வைக்கப்படும் என்று என்று தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது சட்டப்படியான, சரியான காரணமாக அமையும்.
மேற் கூறப்பட்டுள்ள தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் அறிவிப்பாணையில் இடம்பெற்ற விதிகள் திருத்தம் செய்யப்பட்டிருந்தால் அதற்கான அறிவிப்பாணை வெளியிட்டிருக்க வேண்டும்.
ஆனால், 23 ஆகஸ்ட் 2010க்கு முன்பு உரிய விதிகளின்படி பணியில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களும் பணியில் நீடிக்கவும் பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் இன்று வரை திருத்த அறிவிப்பாணை வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், உயர் நீதிமன்ற வழக்கு விசாரணையின் போதும் உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையின் போதும் தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் நீதிமன்றங்களில் அளித்திருந்த உறுதிமொழி ஆவணத்தில் (பிரமாண பத்திரத்தில்) ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து தெரிவிக்கப்பட்ட நிலைப்பாடு எதுவும் வெளிப்படையாகத் தெரிய வரவில்லை.
15 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றத் தீர்ப்பைக் காரணம் காட்டி தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் திருத்தம் வெளியிட வாய்ப்புள்ளது. ஆனால்,
காலம் கடந்த பிறகு விதியைத் திருத்துவது இயற்கை நீதிக்கு எதிரானது. ஒரு பிள்ளை மட்டும் பெற்றால் போதும் என்று கூறிவிட்டு 15 ஆண்டுகள் கடந்த பிறகு இன்னொரு பிள்ளையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவதைப் போலத்தான் இது அமையும்.
தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை பெரும்பாலான மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்துள்ளன. மறுசீராய்வு மனு முன் வைக்கவும் தீர்மானித்துள்ளன. மாநில அரசுகளின் இந்நிலைப்பாடு தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் அமைப்புக்கு புதிய நெருக்கடிகளை உருவாக்கும். மாநில அரசுகளின் கொள்கைக்கு எதிராக தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் முடிவெடுப்பது சிக்கல்களைப் பெரிதாக்கும். கல்வித்துறையில் தீர்க்க முடியாத நிர்வாக நெருக்கடிகளையும் சிக்கல்களையும் உருவாக்கும். பெருமளவில் பள்ளிகளில் ஆசிரியர்களின் பணிச்சுழல் சீர்கெடும்.
மேலும், 20 லட்சத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பணித் தகுதி இழப்பு ஏற்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பு வெளியிட்டிருப்பது தவிர்க்கப்பட்டிருக்க முடியும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கல்வி உரிமைச் சட்டத்தின் படி தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (NCTE) மட்டுமே ஆசிரியர் பணித் தகுதிகளைத் தீர்மானிக்க வேண்டும். தேசியக் ஆசிரியர் கல்வி கவுன்சில் 1993 ஆம் ஆண்டு மத்திய அரசின் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட தனித்த அதிகார அமைப்பாக 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் வகுக்கும் ஆசிரியர் நியமன விதிமுறைகள் அரசியல் அமைப்புச் சட்டம் உறுதியளித்துள்ள அடிப்படை உரிமைகளை மறுப்பதாக அமைந்தால் மட்டுமே நீதிமன்றம் விதிகளை ரத்து செய்ய முடியும்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே,
தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் வகுத்திருந்த விதிமுறையில் தனிமனித அடிப்படை உரிமை மீறல் எதுவும் நடந்ததாக எடுத்துக் கொள்ள முடியாது.
தற்போதைய சூழலில் தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் அமைப்பிற்கு கல்வி உரிமைச் சட்டம் அளித்துள்ள கடமைகளும் பொறுப்புகளும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது என்று தான் சொல்ல முடியும்.
தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் உள்ள விதிகளைத் திருத்தம் செய்வதால் ஏற்படும் சிக்கல்களை நீதிமன்றத்தில் எடுத்துரைக்க தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் தவறிவிட்டது.
தற்போதைய சூழ்நிலையில்,
தமிழ்நாடு அரசும் பிற மாநில அரசுகளும் மறுசீராய்வு மனுவை நீதிமன்றத்தில் முன்வைப்பதைப் போல தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (NCTE) அமைப்பும் 23 ஆகஸ்ட் 2010 இல் உள்ள குறைந்தபட்ச தகுதிகள் குறித்தான விதிகளை உச்ச நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி மறுசீராய்வு மனுவை முன் வைப்பது ஒன்றே ஆசிரியர் சமூகத்திற்கு அளித்த உறுதிமொழியைக் (விதி விலக்கை) காப்பாற்றுவதாக அமையும்.
ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்களிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கும் இவ்விதிகளில் தடை இல்லை என்பதையும் உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைக்க வேண்டும். இதுவே பணியில் அனுபவம் வாய்ந்த ஆசிரியர் சமூகத்தின் மாண்புகளுக்கும் கல்விப் பங்களிப்புகளுக்கும் மதிப்பளிப்பதாக அமையும்.
சு.மூர்த்தி,
கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு.


No comments:
Post a Comment