UPS ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்கள் 20 ஆண்டுகளில் விருப்ப ஓய்வு பெறலாம் - Asiriyar.Net

Thursday, September 18, 2025

UPS ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்கள் 20 ஆண்டுகளில் விருப்ப ஓய்வு பெறலாம்

 



விதிகளை, கடந்த 2-ந்தேதி, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை அரசிதழில் வெளியிட்டது.


பணியாற்றிய ஆண்டுகளை விகிதாச்சார அடிப்படையில் கணக்கிட்டு, உறுதியளிக்கப்பட்ட ஊதியம் சந்தாதாரருக்கு வழங்கப்படும்.

புதுடெல்லி:


25 ஆண்டுகள் பணி முடித்த மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின்கீழ் (யு.பி.எஸ்.), முழுமையான உறுதியளிக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.


இதற்கிடையே, தேசிய ஓய்வூதிய முறையின்கீழ் (என்.பி.எஸ்.), ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் தொடர்பான விஷயங்களை ஒழுங்குபடுத்துவதற்காக சமீபத்தில் 'மத்திய சிவில் சர்வீசஸ் (தேசிய ஓய்வூதிய முறையின்கீழ் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல்) விதிகளை மத்திய அரசு கொண்டு வந்தது. அந்த விதிகளை, கடந்த 2-ந்தேதி, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை அரசிதழில் வெளியிட்டது.


அந்த விதியின்படி, 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்கள், விகிதாச்சார அடிப்படையில் உறுதியளிக்கப்பட்ட ஊதியம் பெற தகுதி உடையவர்கள் என்று மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இந்த விதிகள், 20 ஆண்டுகள் பணிக்கு பிறகு விருப்ப ஓய்வுபெற ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்ட சந்தாதாரர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறது.


பணியாற்றிய ஆண்டுகளை விகிதாச்சார அடிப்படையில் கணக்கிட்டு, உறுதியளிக்கப்பட்ட ஊதியம் சந்தாதாரருக்கு வழங்கப்படும். அவர் ஓய்வு பெறும் நாளில் இருந்து இத்தொகை வழங்கப்படும்.


தனிப்பட்ட தொகுப்பில் 60 சதவீதத்தை இறுதியாக திரும்பப்பெறுதல், ஒவ்வொரு 6 மாத பணிக்கும் அகவிலைப்படி, ஓய்வு பணிக்கொடை, விடுப்பை பணமாக்குதல், மத்திய அரசு ஊழியர்கள் குழு காப்பீட்டு திட்டம் போன்ற இதர சலுகைகளையும் ஓய்வு பெறும்போது பெறலாம்.


ஒருவேளை, விருப்ப ஓய்வு பெற்றுவிட்டு, உறுதியளிக்கப்பட்ட ஊதியம் பெறுவதற்கு முன்பே சந்தாதாரர் இறந்து விட்டால், சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்ட அவரது கணவர்/மனைவிக்கு குடும்ப ஊதியம் வழங்கப்படும். இத்தகவல்களை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad