தமிழ்நாடு அரசின் 7 திட்டங்களை உள்ளடக்கிய கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா கோலாகலமாக தொடங்கியது - Asiriyar.Net

Thursday, September 25, 2025

தமிழ்நாடு அரசின் 7 திட்டங்களை உள்ளடக்கிய கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா கோலாகலமாக தொடங்கியது

 



தமிழ்நாடு அரசின் 7 திட்டங்களை உள்ளடக்கிய கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா சென்னை நேரு உள்ளரங்கில் கோலாகலமாக தொடங்கியது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்ற்றுள்ளனர்.


சமூகநீதியை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு அரசு, கல்வி அனைத்துத் தரப்பினருக்கும் சென்று சேரவேண்டும் என்கிற நோக்கத்தோடு அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளுக்கு 'புதுமைப் பெண்' என்கிற திட்டத்தின்கீழும், மாணவர்களுக்கு 'தமிழ்ப் புதல்வன்' என்கிற திட்டத்தின்கீழும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. 2025-26 கல்வி ஆண்டிற்கான "புதுமைப்பெண் தமிழ்ப் புதல்வன்" திட்டங்களின் தொடக்கவிழா சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.


தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியை 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்னும் கருப்பொருளில் கொண்டாடும் இவ்விழாவில் தலைமையேற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் தெலங்கானா முதலமைச்சர் அ.ரேவந்த் ரெட்டி அவர்களும் திட்டங்களை தொடங்கி வைக்கின்றனர். இவ்விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலை வகிக்கின்றார்.


கல்வி சார்ந்த 5 முக்கிய திட்டங்களையும் சாதனைகளையும் முன்னிலையாக வைத்து இவ்விழா 7 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியாக தமிழ்நாட்டு மக்களின் மனதுக்கு நெருக்கமானத் திட்டமான "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" இடம் பெறும். அதனைத் தொடர்ந்து "நான் முதல்வன்", "விளையாட்டுச் சாதனையாளர்கள்", "புதுமைப் பெண்-தமிழ்ப் புதல்வன்" மற்றும் "அரசுப் பள்ளிகளிலிருந்து முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் சென்ற சாதனையாளர்கள்" ஆகிய அரங்கங்கள் நடைபெறும்.


இவ்வரங்கங்களில் இத்திட்டங்களால் பயன்பெற்றவர்கள். இத்திட்டத்தின் மூலம் சாதித்தவர்கள், அவர்களுக்குத் துணை நின்றவர்கள், ஆசிரியர்கள். நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களையும் தங்கள் வாழ்வில் இத்திட்டங்களின் தாக்கத்தையும் பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர்.


இதன் பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் தெலங்கானா முதலமைச்சர் அவர்களும் இணைந்து 2025-26-ஆண்டிற்கான "புதுமைப்பெண்-தமிழ்ப் புதல்வன்" திட்டங்களைத் தொடங்கி வைப்பார்கள். இந்த ஆண்டு இத்திட்டத்தின் மூலம் 2.57 இலட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்குத் தொடர்ந்து பங்காற்றி வரும் சமூக சிந்தனையாளர்கள், சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்கள், பயிற்றுனர்கள், கல்வி அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோர் பாராட்டிச் சிறப்பிக்கப்பட உள்ளனர்.



No comments:

Post a Comment

Post Top Ad