உதவி ஆசிரியரை துன்புறுத்திய புகாரில் விசாரணைக்கு அழைத்த கல்வி அதிகாரியை அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவர் பெல்ட்டால் அடித்து விளாசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டம் மகமூதாபாத் பகுதியில் ஆரம்பப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்தப் பள்ளியில் கல்வி கற்று வருகின்றனர்.
இந்தப் பள்ளியின் தலைமையாசிரியராக பிரிஜேந்திர குமார் வர்மா என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தலைமையாசிரியர் வர்மா, பள்ளியில் பணியாற்றும் ஒரு பெண் ஆசிரியரிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார் என்று மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு புகார் சென்றிருக்கிறது.
அந்தப் புகாரின் அடிப்படையில், மாவட்ட கல்வி அதிகாரி அகிலேஷ் பிரதாப் சிங், குற்றம் சுமத்தப்பட்ட தலைமையாசிரியரை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
அதன்படி, தலைமையாசிரியர் கடந்த 23-ம் தேதி மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு சென்று தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். ஆனால், அவரது விளக்கம் மாவட்ட கல்வி அதிகாரியைத் திருப்திப் படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், அதிகாரி அகிலேஷ் பிரதாப் புகார் தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்திருக்கிறார்.
ஆனால், தலைமையாசிரியர் சரியாகப் பதில் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. அப்போது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் முற்றியிருக்கிறது.
இதனால் ஆத்திரமடைந்த தலைமையாசிரியர், தனது கையில் வைத்திருந்த ஃபைல்லை (file) மேசையின் மீது வீசிவிட்டு, தன்னுடைய பெல்ட்டை உருவி, மாவட்ட கல்வி அதிகாரி என்று கூடப் பார்க்காமல், அகிலேஷ் பிரதாப் சிங்கைப் பலமுறை தாக்கினார். உடனே, அகிலேஷ் பிரதாப் சிங் போலீஸுக்கு தகவல் கொடுக்க முயன்றபோது, அவரது செல்போனைப் பறித்து உடைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலைப் பார்த்த அலுவலகத்தில் இருந்த எழுத்தர் பிரேம் சங்கர் மவுரியா, தலைமையாசிரியரைத் தடுக்க முயன்றுள்ளார். ஆனாலும், விடாமல் அவர் தனது பெல்ட்டால் அதிகாரியை அடித்திருக்கிறார். அப்போது, அலுவலகத்தில் இருந்த மற்ற ஊழியர்கள் ஓடிவந்து இந்தச் சம்பவத்தைத் தடுத்து, அதிகாரியைத் தலைமையாசிரியரிடமிருந்து மீட்டனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், கல்வி அதிகாரி அகிலேஷ் பிரதாப் சிங்கை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர் கொடுத்த புகாரின் பேரில், அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தலைமையாசிரியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைமையாசிரியர் தாக்குதல் நடத்தியது, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தது. அதனைக் கைப்பற்றிய போலீஸார், செல்போன் மற்றும் அவர் தாக்கிய பெல்ட் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்து வழக்கில் ஆதாரமாகச் சேர்த்துள்ளனர்.
இதனிடையே, மாவட்ட கல்வி அதிகாரி அகிலேஷ் பிரதாப் சிங் தன்னைத் தொடர்ந்து துன்புறுத்தி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள தலைமையாசிரியர் பிரிஜேந்திர வர்மா, வேண்டுமென்றே தன்னைச் சிக்கவைப்பதற்காக அவரது தூண்டுதலின் பேரிலேயே பெண் ஆசிரியர் புகார் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இருப்பினும், போலீஸார் சம்பவம் தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், அரசு அலுவலகங்களில் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடைமுறைகளை மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது.
மேலும், பிரிஜேந்திர குமார் வர்மாவுக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்கக் கூடாத வகையில் இருக்க வேண்டும் என்று சக அரசு ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment