2 ஆண்டில் 8 'TET' தேர்வு: ஆசிரியர் சங்கம் யோசனை - Asiriyar.Net

Monday, September 22, 2025

2 ஆண்டில் 8 'TET' தேர்வு: ஆசிரியர் சங்கம் யோசனை

 




அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றவும், பதவி உயர்வு பெறவும், ஆசிரியர்கள், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதேநேரத்தில், 55 வயதை கடந்த ஆசிரியர்களுக்கு இது பொருந்தாது.


தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், இரண்டு ஆண்டுகளில் தேர்ச்சி பெற வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


இதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 'டெட்' தேர்ச்சி பெறாமல் பணியாற்றும், 1.75 லட்சம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். எனவே, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்து, சட்ட ரீதியான தீர்வுகளை பெற முன்வந்துள்ளது.


அதேசமயம், ஆசிரியர்கள் சங்கத்தினருடன், தமிழக அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது, வழக்கம் போல, ஆறுமாதத்திற்கு ஒரு, 'டெட்' தேர்வை நடத்த வேண்டும். பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை என, ஆண்டுக்கு மூன்று சிறப்பு, 'டெட்' தேர்வை நடத்தவேண்டும்.


இரண்டு ஆண்டுகளில் எட்டு, 'டெட்' தேர்வுகளை நடத்தி முடித்து விடலாம். அவை அனைத்திலும் பங்கேற்றால், பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் தேர்ச்சி அடைந்து, பணி பாதுகாப்பு பெறுவர். அதற்கான பணிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஈடுபட வேண்டும் என, யோசனை தெரிவித்துள்ளனர்.


இது குறித்து, பள்ளிக்கல்வி துறை, தற்போது ஆலோசித்து வருவதாக ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.


 

No comments:

Post a Comment

Post Top Ad