‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மாணவர்களின் சாதனைகள் அனைவரையும் நெகிழ வைத்தது.
கல்வித்துறையை மேம்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், 2025 - 2026ஆம் ஆண்டிற்கான ’புதுமைப் பெண் - தமிழ்ப் புதல்வன்’ திட்டங்களின் தொடக்க விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஸ், கோவி.செழியன் உள்ளிட்ட அமைச்சர்களும், நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர்கள் வெற்றிமாறன் மிஷ்கின், ஞானவேல், மாரிசெல்வராஜ், தியாகராஜன் குமாரராஜா, ப்ரேம் குமார், தமிழரசன் பச்சைமுத்து, கிரிக்கெட் வீரர் நடராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ’கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ எனும் கருப்பொருளுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். கலை நிகழ்ச்சிகளுடன் இந்நிகழ்ச்சி கோலாகலமாகத் தொடங்கியது.
நிழச்சியில் பேசிய நான் முதல்வன் திட்டத்தில் பலன்பெற்ற தென்காசியை நேர்ந்த மாணவி பிரேமா, தனது முதல் மாத சம்பளத்தை மேடையில் தந்தையிடம் வழங்கி அனைவரையும் கண்கலங்கச் செய்தார். பெண் பிள்ளையை எதற்காக படிக்க வைக்கிறீர்கள் எனக் கேட்ட ஊர் மக்களுக்கு மத்தியில், பல்வேறு தடைகளை கடந்து தந்தை தன்னை படிக்க வைத்ததாக உணர்ச்சி பொங்க கூறினார்.
புதுமைப் பெண் திட்டத்தில் கிடைத்த பணத்தை கொண்டு காது கேட்காத தனது தாய்க்கு மிஷின் வாங்கிக் கொடுத்தாகக் கூறிய தஞ்சை மாணவி ரம்யா, அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தினார்.
மாணவி சுபலட்சுமி பேசுகையில், புதுமைப் பெண் திட்டத்தை முதுகலை படிப்புக்கும் நீட்டிக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். கணித ஆசிரியை ஆக வேண்டும் எனக் கூறிய மாணவி சுபலட்சுமியை உடனடியாக அழைத்த முதலமைச்சர் ஸ்டாலின், தனது பேனாவை அன்பளிப்பாக வழங்கினார்.
'நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் ஜப்பானில் வேலை கிடைத்திருப்பதாகக் கூறிய கன்னியாகுமரி மாணவி, ஜப்பான் மொழியில் பேசி அசத்தினார்.
இதனிடையே, தனது தாய் தூய்மைப் பணி செய்தும், வீட்டுவேலை செய்தும் தன்னை படிக்க வைத்தார் எனவும், அரசின் உதவியால் தற்போது மருத்துவம் படிப்பதாகவும், அரசுப் பள்ளியில் படித்த மாணவர் மணிவாசகம் நெகிழ்ச்சியுடன் கூறினார். அப்போது, குறிக்கிட்டு பேசிய முதல்வர், துப்புரவு பணியாளர் என்பதை ‘தூய்மை பணியாளர்’ என மாற்றி இருப்பதாகக் குறிப்பிட்டார்.
"போலீஸ் ஆகணும்னு ஆசை.. ராயல் என்ஃபீல்டு பைக் வாங்கி அதுல அம்மாவை உக்கார வச்சு கூட்டிட்டு போகணும்.."
கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழாவில் பங்கேற்ற மாணவி பேட்டி.
ஒவ்வொரு அரங்கத்திலும் அந்தந்த திட்டங்களால் பயன்பெற்றவர்கள், அத்திட்டத்தின் மூலம் சாதித்தவர்கள், அவர்களுக்குத் துணை நின்றவர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களையும் தங்கள் வாழ்வில் இத்திட்டங்களின் தாக்கத்தையும் பகிர்ந்து கொண்டனர்.
அதன்பின்னர், தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்குத் தொடர்ந்து பங்காற்றி வரும் சமூக சிந்தனையாளர்கள், சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்கள், பயிற்றுனர்கள், கல்வி அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோர் பாராட்டிச் சிறப்பிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment