பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். ஆசிரியர் சங்கங்கள் சில ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.
விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். ஒருவேளை பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்தால் கிட்டத்தட்ட 12 ஆயிரம் குடும்பங்கள் பயன் அடையும் என்று கூறப்படுகிறது. இதற்கு சுமார் 450 கோடி வரை செலவாகும் என்றும் கூறப்படுகிறது.
சிவகங்கையில் பள்ளிக்கல்வித்துைற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று அளித்த பேட்டியில் கூறும் போது, "அரசியல் அட்டவணையில் 22 மொழிகள் உள்ளது. இதனை அனைவரும் கற்க வேண்டும் என்பதில் தவறு இல்லை. ஆனால் கட்டாயப்படுத்தக்கூடாது.
இருமொழி கொள்கை பயின்ற நமது பிள்ளைகள் உலகம் முழுவதும் பெரிய நிறுவனங்களில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள். மொழிக்கொள்கையில் மட்டும் மத்திய அரசு உறுதியாக இருப்பது ஏன்? அவர்கள் 3-வது மொழியாக இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கும் வேலையைத்தான் செய்கிறார்கள். அதனை கண்டிப்பாக நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
மும்மொழி கொள்கை
தமிழ்நாடு அதிக அளவில் தகுதி வாய்ந்தவர்களை உருவாக்கி இருப்பதை ஏற்றுக்கொள்ளாமல் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும்? கொள்கை என வரும்பொது மொழியை தவிர்த்து அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. பிடிவாதமாக உள்ளார்கள். அது வருத்தத்திற்குரியது. மேலும் மாணவர்களின் நலம் சார்ந்த விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டாம்.
பகுதி நேர ஆசிரியர்கள்
ஒவ்வொரு ஆண்டும் கல்விக்கான நிதியை விடுவிப்பதுபோன்று தற்போதும் விடுவிக்க வேண்டும் எனக்கூறியும், கடந்த 2 ஆண்டுகளாக நிதியை விடுவிக்காமல் பிடிவாதம் பிடிப்பது ஏன்? அதனால் அரசியல் செய்வது யார்? என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வது குறித்து இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். ஆசிரியர் சங்கங்கள் சில ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்" என்று அன்பில் மகேஷ் கூறினார்.
பகுதி நேர ஆசிரியர்கள் பிரச்சனை என்ன
முன்னதாக தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையில் 13 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்கள், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தனித்தனியாக கோரிக்கை மனுக்களை அனுப்பி வந்தார்கள். ஆனால் தமிழக அரசு அவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க மறுத்துவிட்டது.இதனை எதிர்த்து பகுதி நேர ஆசிரியர்கள் நீண்ட காலமாக அடிக்கடி போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள்.
7500 மட்டுமே ஊதிய உயர்வு
அவர்களுக்காக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் குரல் கொடுத்து வருகிறார்கள். ஒருமுறை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 13 ஆண்டுகளில் அவர்களுக்கு ரூ.7,500 மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது என்றும் பணி நிலைப்பு வேண்டி பத்தாண்டுகளுக்கும் மேலாக பகுதி நேர ஆசிரியர்கள் அறவழியில் போராடி வருகின்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.
12000 ஆசிரியர்கள்
மேலும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு வழங்குவதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.450 கோடி மட்டுமே கூடுதலாக செலவாகும் என்று கூறிய ராமதாஸ், இதனால் 12 ஆயிரம் குடும்பங்கள் அடையும் பயனுடன் ஒப்பிடும் போது இது ஒரு பொருட்டல்ல என்றும், எனவே, தமிழக அரசு இந்த கோரிக்கையை கனிவுடன் ஆய்வு செய்து பகுதி நேர ஆசிரியர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment