டெட் கட்டாய தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களும் எட்டாம் வகுப்பு வரை கட்டாயம் கல்வி கற்பதை உறுதி செய்யும் வகையில் கடந்த 2009 கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கல்வி கற்று தரும் ஆசிரியர்களுக்கும் தகுதியை நிர்ணயிக்கும் வகையில் Teachers Eligibility Test எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் 2011 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது.
இதன்படி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு பாடம் நடத்துதற்கு பணி அமர்த்தப்பட்டனர். தமிழ்நாட்டை பொறுத்தவரையில், ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தி வருகிறது. 2012 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் TET தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தாள் 1 மூலம் 1-5ஆம் வகுப்புகளுக்கான ஆசிரியர்களும், தாள் 2 மூலம் 6-8ஆம் வகுப்புகளுக்கான ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில்தான் ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம், 2011 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் தேதிக்கு முன்னர் பணிக்குச் சேர்ந்தவர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமில்லை என தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து சில ஆசிரியர் சங்கங்களும், தமிழ்நாடு அரசும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.
இதேபோல தங்களுக்கு டெட் தேர்வு பொருந்தாது என சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை நடத்துவோரும் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை விசாரித்த திபன்கார் தத்தா (Dipankar Datta) மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு அளித்துள்ள தீர்ப்புதான், தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பல்வேறு ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில், 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி மதிப்பெண் 60ஆக குறைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பொது பிரிவினர் 90 மதிப்பெண்கள், பிசி, எம்பிசி, பட்டியல் இனத்தவர் உள்ளிட்ட பிரிவினருக்கு 82 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment