ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் - Asiriyar.Net

Wednesday, September 10, 2025

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள்

 




இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியில் தொடர ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி, 2012-ம் ஆண்டு முதல் இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்களே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.


அதன்படி, நடப்பு ஆண்டுக்கான 'டெட்' தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மாதம் (ஆகஸ்டு) 11-ந்தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்த தேர்வை எழுத விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க நேற்று முன்தினம் அவகாசம் முடிந்த நிலையில், இன்று (புதன்கிழமை) வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.


முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமானோர் விண்ணப்பிப்பதாக சொல்லப்படுகிறது. என்ன திடீரென்று இவ்வளவு பேர் விண்ணப்பிக்கிறார்கள் என்று பார்த்தால், சமீபத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கியதன் எதிரொலியாக, அதனால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே பணியில் இருக்கும் 'டெட்' தேர்வை எழுதாத ஆசிரியர்களும் இதற்கு விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், டெட் தேர்வு நடைமுறைக்கு வருவதற்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களும், அந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும், தேர்வை எழுத விரும்பாதவர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. இதனால் தமிழ்நாட்டில் மட்டும் அரசு பள்ளி ஆசிரியர்கள் 1,38,000 பேரும், அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் 38 ஆயிரம் பேரும் என மொத்தம் 1,76,000 ஆசிரியர்கள் பாதிப்படைகிறார்கள்.


அந்தவகையில் அடுத்தக்கட்டமாக இந்த ஆசிரியர்கள் விவகாரத்தில் என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது பற்றி தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது. அரசு அவர்களுக்கு இதுவரை தேர்வு நடத்த முடிவெடுக்காத சூழலில், டெட் தேர்வை எழுதாமல் பணியில் இருந்துவரும் ஆசிரியர்கள், கடந்த மாதம் வெளியிடப்பட்ட டெட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவில் முண்டியடித்து போட்டிப் போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.


இதுபற்றி அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது, 'சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களில் சிலர் இந்த தேர்வை எழுதிதான் பார்ப்போமே என்ற மனநிலையில் விண்ணப்பித்து இருக்கின்றனர். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு தொடர்பாக தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. பெரும்பாலும் இந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வு நடத்துவதற்கே வாய்ப்பு அதிகம் உள்ளது' என்றனர்.


No comments:

Post a Comment

Post Top Ad