தமிழகத்தில் அனைத்து தேர்வுகளிலும் திருக்குறள் தொடர்பான வினாக்கள் கேட்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது’ என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த ராம்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். திருக்குறளில் அறத்துப்பால் மற்றும் பொருட்பால் அதிகாரங்களில் உள்ள அனைத்து திருக்குறள்களையும் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடத் திட்டத்தில் சேர்க்க 2016-ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில், தமிழக அரசு 2017-ல் அரசாணை வெளியிட்டது. இருப்பினும், அந்த அரசாணை பெயரளவில் மட்டுமே உள்ளது. மொத்தம் 30 திருக்குறள் முதல் 60 திருக்குறள்கள் மட்டுமே கற்பிக்கப்படுகிறது. பாடத் திட்டத்தில் திருக்குறள் மட்டும்தான் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பொருள் கொடுக்கப்படவில்லை. மாணவர்கள் தேர்வுகளில் திருக்குறள் பெயரளவில் தான் இடம் பெறுகின்றன.
எனவே, தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடத் திட்டத்தில் திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பாலின் அதிகாரங்களில் உள்ள திருக்குறள்களை பொருளுடன் இடம் பெறச் செய்யவும் தேர்வுகளில் திருக்குறள் சம்பந்தமான கேள்விகள் இடம் பெறச்செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், "அனைத்து வகுப்புகளுக்கும் திருக்குறள் பாடமாக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் திருக்குறள் மட்டுமே பாடப் புத்தகத்தில் அச்சிடப்பட்டிருக்கும், அதற்கான விளக்கத்தை உரைகளில் தேடி படிக்கும் வகையில் இருந்தது.
தற்போது திருக்குறள், அதன் பொருள் விளக்கம், சொல் விளக்கம் போன்ற அனைத்தும் சேர்த்து பாடப் புத்தகங்களில் அச்சிடப்பட்டுள்ளன. தேர்வுகளிலும் திருக்குறள் தொடர்பான வினாக்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்டு வழக்கை முடித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment