பள்ளி மாணவிகளிடம் ஒழுக்க கேடாக நடக்கும் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்களை ரத்து செய்ய தமிழக அரசு உத்தரவு அளித்துள்ளது.
மாணவிகளிடம் ஒழுக்க கேடாக நடக்கும் ஆசிரியர்களுக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கவும் தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் பாதுகாப்புக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது;
தாளாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு போக்சோ சட்டம் (POCSO), SSAC அமைப்பு மற்றும் பள்ளிகளில் கல்விசார் / கல்வி இணை நிகழ்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவிகளிடம் ஒழுக்கக்கேடான முறையில் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன் தண்டனை வழங்குதல், கட்டாய பணி ஓய்வு (Compulsory Retirement) பணி நீக்கம் (Removal), பணியறவு (Dismissal) மற்றும் அவர்களின் கல்விச் சான்றுகளை ரத்து செய்ய பரிந்துரைத்தல் போன்றவை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுதல் தொடர்பாக வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு, அனைத்து பள்ளிகளிலும் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு (Student Safeguarding Advisory Committee) ஆணையிடப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்டக்கல்வி அலுவலர்கள் அனுப்பப்பட்டு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பள்ளிகளிலும் வைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கெதிரான வன்முறைகள் தடுப்பு தொடர்பான தகவல்களை அனைத்து மாணவர்களுக்கும் காலை வழிபாட்டு கூட்டத்தில் ஆசிரியர்கள் விளக்கி கூறுதல் வேண்டும். மாணவர் மனசுப் பெட்டி, 14417 மற்றும் 10980 ஆகிய தொடர்பு எண்கள், மாணவிகள் அறிந்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு; குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் (POCSO) சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.மேலும், பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேசிய குழந்தைகள் நல ஆணையத்தால் குழந்தைகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வெளியிடப்பட்ட YOU TUBE video-aso பள்ளியில் காண்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்டக் கல்வி அலுவலர்களால் பள்ளி முதல்வர்களுக்கு நடத்தப்படும் மாதாந்திரக் கூட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
என்.சி.சி,ஜே.ஆர்.சி மற்றும் சாரண-சாரணியர் இயக்கம் போன்ற அமைப்புகள் செயல்படும் பள்ளிகளை முறையாக கண்காணிக்க வேண்டும். இவ்வமைப்புகள் செயல்படும் பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா என்பதை பள்ளி ஆய்வு மற்றும் ஆண்டு ஆய்வின் போது உறுதி செய்யவேண்டும். மேலும், போக்சோ சட்டம் குறித்தும் பள்ளி முதல்வர்கள் மூலமாக ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ஒரு சில மாவட்டங்களிலிருந்து மாணவிகள் மீது ஒழுக்கக்கேடான செயல்பாடுகள் நடை பெறுவதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன. எனவே அனைத்து பள்ளி முதல்வர் , தாளாளர் ,ஆசிரியர்கள் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு மாவட்டக் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர், நலத்துறை அலுவலர்கள், சுகாதாரத்துறை அலுவர்கள் மற்றும் காவல்துறை அலுவவர்கள் ஆகியோர்களைக் கொண்டு பயிற்சி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது,
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment