மத்திய அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்த்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று வேகமாக பரவியது.
மத்திய அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது தற்போது 60 ஆக உள்ள நிலையில், 62 ஆக உயர்த்தப்பட்டதாக இந்தியில் சுற்றறிக்கை பரவியதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்திருக்கிறது. அரசு வெளியிட்ட பதிலில், உண்மைத்தன்மை இல்லாத ஆதாரமற்ற போலியான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றி வருகிறார்கள். மத்திய அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது தற்போது 60 ஆக உயர்ந்துள்ளது. இதனை 62 ஆக உயர்த்தி இருப்பதாக இந்தி மொழியில் அச்சிடப்பட்ட ஒரு சுற்றறிக்கை சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
அந்த சுற்றறிக்கையில், "மத்திய அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 2 அதிகரிக்கப்பட்டு, 62 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு (2025) ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து இது நடைமுறைக்கு வரும்.
அனுபவமிக்க பணியாளர்கள் கூடுதலாக 2 ஆண்டுகள் சேவை செய்வதன் மூலமாக மத்திய அரசுக்கு உதவ இயலும். இந்த திட்டத்தால் அரசு துறைகளில் காலிப்பணி இடங்களை நிரப்புவதற்கான செலவும் குறையும். பணியாளர்கள் 2 ஆண்டுகளுக்கு பின்னர் ஓய்வூதியம் பெறுவார்கள் என்பதால், அதற்கான செலவும் அரசுக்கு கணிசமாக குறையும்" என்று கூறப்பட்டிருந்தது.
மேலும் அந்த இந்தி சுற்றறிக்கையில், "இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 1998-ம் ஆண்டு 61.4 ஆண்டுகள் ஆக இருந்தது. ஆனால் இது 2024-ம் ஆண்டில் 72.24 ஆண்டுகள் ஆக அதிகரித்திருக்கிறது. இதுவும் மத்திய அரசு பணியாளர்கள் ஓய்வுபெறும் வயதை 2 ஆண்டுகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம்" என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது மத்திய அரசு பணியாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இந்த சுற்றறிக்கை பறந்த சில மணி நேரத்துக்குள் அது போலியானது என்று கூறி மத்திய அரசு, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
மத்திய அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான பத்திரிகை தகவல் அலுவலக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டிருந்த பதிவில், இந்த "மத்திய அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்த்தப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை.
மத்திய அரசு இதுபோன்ற உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை. உண்மைத்தன்மை இல்லாத ஆதாரமற்ற போலியான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம்" என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment