5000 பள்ளிகளில் முடியும் தருவாயில் பணிகள், டிசம்பர் மாதத்திற்குள் திறக்க திட்டம்
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அவை அனைத்தும் செயல்படுத்தபட்டு வருகின்றன. அத்தகைய சிறப்பான திட்டங்களில் ஒன்றுதான் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கும் (ஸ்மார்ட் கிளாஸ்) திட்டம்.
தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் ரூ. 455.32 கோடியில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக, அரியலூர், கடலூர், நாகப்பட்டினம், சேலம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 493 அரசு தொடக்கப் பள்ளிகளில் 634 திறன்மிகு வகுப்புகள் அமைக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் முதல்வர் மு.க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த திறன்மிகு வகுப்பறைகள், குழந்தைகள் ஆர்வமுடன் கற்கும் வண்ணம் வண்ணமிகு வகுப்பறையாக மாற்றப்பட்டு, அவ்வகுப்பறையில் திறன் பலகை (ஸ்மார் போர்டு) பொருத்தப்பட்டு, இணைய வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
காணொளி (வீடியோ) ஆகியவற்றினை இத்திறன் பலகையினைப் பயன்படுத்தி சொல்லிக் கொடுக்கும்போது அது, மாணவர்களின் புரிதலை எளிமையாக்கும். அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளிலும் இந்த திறன்மிகு வகுப்புகளை செயல்படுத்துவதில் பள்ளிக் கல்வித்துறை முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.
தற்போது 5 ஆயிரத்திற்கும் அதிகமான பள்ளிகளில் இந்த திறன்மிகு வகுப்புகள் அமைப்பதற்கான பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது எனவும், வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முழு பணிகளும் முடிக்கப்பட்டு, முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட உள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும், இடைநிற்றலின்றி கல்வி பெறுவதை உறுதி செய்யவும், உயர் கல்வி பயிலவும், வேலைவாய்ப்பினை பெறுவதற்கு வழிகாட்டவும் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னோடித் திட்டங்களை வகுத்து பள்ளிக் கல்வித் துறை வாயிலாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், கீழ்காணும் பல்வேறு சிறப்பான பணிகளை பள்ளிக்கல்வித்துறை செயலாற்றி வருகிறது.
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள்:
* பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதலாக வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிவறைகள், சுற்றுச்சுவர்கள், மாணவ-மாணவிகளுக்கு தங்கும் விடுதிகள் அமைக்க பள்ளிக் கல்வி இயக்ககம் மூலம் ரூ.2,918.64 கோடிக்கு செலவிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
* 2021-2024ம் ஆண்டில் பாடநூல் கழகம் மற்றும் கல்வி சேவை கழகம் மூலம் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் ரூ.394.89 கோடியில் 8,209 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை நிறுவுவதற்கான பணி ஆணைகள் வெளியிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 2024-25ம் ஆண்டில், 654 அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை நிறுவ ரூ.41.856 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* காலை உணவுத் திட்டத்தின் மூலம் தற்போது தமிழ்நாடு முழுவதிலும் மொத்தம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் வயிறாற உண்டு மகிழ்ச்சியோடு பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
* 2023-24ம் ஆண்டில் தொலைதூரம், அடர்ந்த காடு மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள 1,692 குடியிருப்புகளைச் சேர்ந்த தொடக்கநிலை முதல் உயர்நிலை வரையில் படிக்கும் 27,707 மாணவர்கள் பள்ளிக்குப் பாதுகாப்பாகச் சென்றுவர போக்குவரத்து பாதுகாவலர்களுடன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால், குழந்தைகள் அச்சமில்லாமல் பள்ளிகளுக்கு சென்று பயில்வது அப்பகுதி மக்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
* 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் அறிவுசார் குறைபாடுள்ள மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் அடிப்படை எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு திறன்களை உறுதிசெய்யும் வகையில் எளிமைப்படுத்தப்பட்ட மாணவர் பயிற்சி நூல் மற்றும் ஆசிரியர் கையேடு போன்ற கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களைச் சிறப்புப் பயிற்றுநர்கள் மூலம் அடையாளம் காணும் வகையில் “நலம்நாடி” என்னும் செயலி ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* 4,989 இடைநிலை ஆசிரியர்கள், 5,154 பட்டதாரி ஆசிரியர்கள், 3,876 முதுகலை ஆசிரியர்களுக்கான மொத்தம் 14,019 ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் நியமனம் செய்யப்பட்டு வகுப்பறைகளில் கற்பித்தல் பணி தடையின்றி மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
* ஆசிரியர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் 76 நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வட்டார கல்வி அலுவலர்களாக பதவி உயர்வுவழங்கப்பட்டுள்ளன.
* நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு. ஏறத்தாழ 10 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
* தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு மூலம் 11ஆம் வகுப்பு பயிலும் 1,000 மாணவ மாணவியர் தேர்வு செய்யப்பட்டு ஊக்கத் தொகையாக மாதம் ரூ.1,000 வீதம் இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படுகிறது.
* கிராமப்புற மாணவ மாணவிகள் பள்ளிகளுக்கு உரிய நேரத்தில் வந்து செல்வதற்கு வசதியாக 3,44,144 பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு ரூ.165.84 கோடி செலவில் இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
* அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் 6ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று பின்னர் உயர்கல்வி பயிலும் மாணவியர்க்கு மாதம் ரூ.1,000 வழங்கும் “புதுமைப்பெண்” திட்டம், அதேபோல மாணவர்களுக்கும் மாதம் ரூ. 1,000 வழங்கும் “தமிழ்ப் புதல்வன்” திட்டம் ஆகியவற்றில் ஏறத்தாழ 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ -மாணவியர் பயன் பெறுகின்றனர்.
* இதுவரை 20,000 பள்ளிகளில் இணையதள வசதி
தமிழ்நாட்டிலுள்ள 6,223 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், இதுவரை 5,913 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 6,992 நடுநிலைப்பள்ளிகளில் 3,799 பள்ளிகளில் இவ்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடக்கப் பள்ளிகளைப் பொறுத்தமட்டில் மொத்தமுள்ள 24,338 பள்ளிகளில் 10,620 பள்ளிகளில் இணையதளவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பள்ளிகளுக்கு அதிவேக இணைய இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332 பள்ளிகளில் இப்பணியானது முடிக்கப்பட்டு, மீதமுள்ள 17,221 அரசுப் பள்ளிகளுக்கும் பணிநடைபெற்று வருகிறது. வரும் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் கற்றல் செயல்பாட்டில் புதுமையான அனுபவங்களோடு உத்வேகமான மனநிலையோடு கல்வி கற்பார்கள்.
No comments:
Post a Comment