உங்க PAN Card அப்டேட் செய்ய வேண்டுமா? - புதிய Update -ல் அம்சங்கள் என்னென்ன? - Asiriyar.Net

Monday, November 25, 2024

உங்க PAN Card அப்டேட் செய்ய வேண்டுமா? - புதிய Update -ல் அம்சங்கள் என்னென்ன?

 



வருமான வரித்துறை வழங்கும் பான் அட்டையை க்யூ.ஆர்.கோடு உட்பட இதர பாதுகாப்பு அம்சங்களுடன் ரூ.1,435 கோடியில் புதுப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.


நாட்டில் தற்போது 78 கோடி பேரிடம் பான் அட்டை உள்ளது. இதில் உள்ள 10 இலக்க அடையாள எண் மூலம், ஒருவரின் பண பரிவர்த்தனை வருமானவரித் துறையுடன் இணைக்கப்படுகிறது. தற்போது இந்த அட்டையை ரூ.1,435 கோடி செலவில் புதுப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 


இந்தத் திட்டத்தின் கீழ் தற்போதுள்ள பழைய பான் அட்டைகள் மற்றும் புது பான் அட்டைகள் க்யூ.ஆர் கோடு வசதியுடன் மேம்படுத்தப்படும். ஏற்கெனவே பான் எண் வைத்திருப்பவர்களுக்கு பான் எண் மாறாது, பான் அட்டை மட்டும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்படும்.


இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியது: “பான் அட்டையை, வர்த்தகத்துக்கான பொது அடையாள அட்டையாகவும், உண்மை மற்றும் தரவு நிலைத்தன்மையின் ஒற்றை ஆதாரமாகவும் மாற்ற பான் 2.0 திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் பான் அட்டை, தகவல்களை அளிக்கும் வலுவான ஆதாரமாக இருக்கும். இது ஏற்கெனவே ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது.


இந்தத் திட்டம் மூலம் தற்போது பான் அட்டை வைத்துள்ள 78 கோடி பேர், தங்கள் பான் அட்டைகளை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம். இதில் பான் எண் மாறாது. பான் அட்டை மட்டும் கூடுதல் பாதுகாப்பு மற்றும் தரவு அம்சங்களுடன் மேம்படுத்தப்படும். 


வர்த்தகத்துக்கான பொது அடையாள எண் வேண்டும் என தொழில்துறையினர் நீண்டகாலமாக கோரி வருகின்றனர். பான் 2.0 திட்டம் மூலம் பான் அட்டை வர்த்தகத்துக்கான அடையாள அட்டையாக மாறும். இதில் அனைத்து பான்/டான்/டின் எண்கள் ஒன்றிணைக்கப்படும்.


க்யூ.ஆர் கோடு தவிர , பான் 2.0 திட்டத்தில் "கட்டாய பான் தரவு பெட்டக அமைப்புடன்" ஒருங்கிணைந்த இணையதளம் உருவாக்கப்படும். இந்த வசதியை, பான் தரவைப் பயன்படுத்தும் அனைத்து நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். 


தரவு பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இந்த மாற்றம் செய்யப்படுகிறது. இதில் உள்ள முக்கியமான அம்சம் பான் தரவு பெட்டக அமைப்பு. பான் எண் தொடர்பான தகவல்களை வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. பான் எண் தகவல்களை நாங்கள் பல இடங்களுக்கு வழங்குகிறோம். அந்த நிறுவனங்கள் பான் தரவு பெட்டக அமைப்பின் மூலம் பாதுகாப்பாக பயன்படுத்த முடியும்.


தற்போதுள்ள மென்பொருள் பழமையானது என்பதால், இதற்காக ஒருங்கிணைந்த இணையதளம் உருவாக்கப்படும். அனைத்து பணிகளும் காகிதம் இன்றி ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும். பான் 2.0 அட்டை பெறுவதற்கான விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களை வருமானவரித் துறை இனிமேல் வெளியிடும்” என்று அவர் கூறினார்.


No comments:

Post a Comment

Post Top Ad