தவறான பாதையில் செல்லும் மாணவர்களை வழிநடத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்று பள்ளிக் கல்வித் துறை செயலர் மதுமதி தெரிவித்தார்.
குழந்தைகள் உரிமைகளும் மற்றும் நீங்களும் (CRY) என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் பெண் குழந்தைகளின் கல்விக்கான விழிப்புணர்வு நடைப்பயணம் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி துறை செயலர் சோ.மதுமதி, இயக்குநர் தரணி ராஜேந்திரன் மற்றும் இளைஞர்கள், பொதுமக்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பெண் குழந்தைகள் உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்து நடனம் உட்பட பல்வேறு செயல்பாடுகள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது,
அதன்பின்னர் பள்ளிக் கல்வித் துறை செயலர் சோ.மதுமதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பள்ளி குழந்தைகள் உயர்கல்வி பயில்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பள்ளி மாணவர்கள் அனைவரும் மேற்படிப்புக்கு செல்ல வேண்டும் என்பது தமிழக அரசின் நோக்கம். இதற்காகவே புதுமைப் பெண், நான் முதல்வன் உட்பட பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்பலனாக தேசியளவில் தமிழகத்தில்தான் உயர்கல்வி செல்லும் மாணவர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஓரிடங்களில் ஆசிரியர் மீதான தாக்குதலை வைத்து பரவலாக உள்ளது என்று கூற முடியாது.
தற்போது மட்டுமின்றி எல்லா காலக்கட்டங்களிம் ஒரு சில மாணவர்கள் இதுபோன்ற தவறான செயல்களை செய்கின்றனர். அத்தகைய மாணவர்களை அடையாளம் கண்டு சரிசெய்வது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். இன்றைக்கு ஆசிரியர்கள் நிராயுதபாணியாகதான் வேலை செய்து வருகிறார்கள். எனவே, மாணவர்களை அன்பால்தான் ஆசிரியர்கள் அணுக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment