மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் / மனம் சம்பந்தப்பட்ட மறுவாழ்வு சேவைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள விழுதுகள் என்ற ஒருங்கிணைந்த சேவை மையத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ், சென்னை, சோழிங்கநல்லூர், கண்ணகி நகரில், மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் / மனம் சம்பந்தப்பட்ட மறுவாழ்வு சேவைகள் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள விழுதுகள் என்ற ஒருங்கிணைந்த சேவை மையத்தை திறந்து வைத்தார்.
உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைத் திட்டத்தின் நோக்கம், மாற்றுத்திறனாளிகளுக்கு அணுகல் தன்மையுடன் கூடிய ஒருங்கிணைந்த சேவைகளை அவர்களின் தேவைகேற்ப இல்லங்களிலும், மறுவாழ்வு சேவைக்கென வடிவமைக்கப்பட்ட ஊர்திகளிலும், ஒருங்கிணைந்த சேவை மையங்களிலும் வழங்குவதாகும். அதன்படி, உரிமைகள் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் அமையப் பெறவுள்ள 273 ஒருங்கிணைந்த சேவை மையங்களில் முதலாவது மையமாக சென்னை, சோழிங்கநல்லூர், கண்ணகி நகரில் அமைக்கப்பட்டுள்ள விழுதுகள் – ஒருங்கிணைந்த சேவை மையத்தை முதல்வர் ஸ்டாலின் இன்றைய தினம் திறந்து வைத்தார்.
விழுதுகள் மையம்
சென்னை மாவட்டத்தில் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முன்னேற விழையும் பகுதிகளில் ஒன்றான கண்ணகி நகரில் இச்சேவைகளை முதலில் வழங்க அரசு மிக கவனமாக இந்த பகுதியை தேர்ந்தெடுத்துள்ளது.
இந்த ஒருங்கிணைந்த சேவை மையத்தில் முதன்முறையாக மாற்றுத்திறனாளிகளின் உடல் மற்றும் மனம் தொடர்பான நாள்பட்ட மறுவாழ்வு தேவைகளை நிறைவேற்றும் வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக்கல்வி, கண்பார்வை அளவியல், கேட்டல் மற்றும் பேச்சுப்பயிற்சி, இயன்முறை, செயல்முறை மற்றும் உளவியல் ஆகிய ஆறு மறுவாழ்வு சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்படுவதோடு, இச்சேவைகளை வழங்க வல்லுநர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இம்மையம் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. 2023-24 - இல் கள அளவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு பணியின் போது, கண்டறியப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணையின்படி, இம்மையத்தில் சேவைகள் வழங்கப்படும். இம்மையமானது பெருநகர சென்னை மாநகராட்சியின் பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் அனைத்து அணுகல் வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் கையில் இம்மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இம்மையத்தில் அமைந்துள்ள கழிப்பறைகளைப் பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்படுமாயின், அங்கு வைக்கப்பட்டுள்ள பஸ்ஸரை (Buzzer) பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தால் முழுமையாக தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட ஐஓடி தொழில் நுட்பம் முதல்முறையாக இந்தியாவிலேயே இம்மையத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அவசர சூழ்நிலைகளை, தொலைவில் இருந்தாலும் உடனே கண்டறிந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிட முடியும்.
தரமான கட்டட வடிவமைப்பினை ஏற்படுத்தி மத்திய அரசால் வரையறுக்கப்பட்ட Harmonized Guidelines 2021–ன்கீழ் ஒரு புதிய பரிமாணத்தை அடைய இம்மையம் 3.08 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும் மற்றொரு முன்னெடுப்பாக இம்மைய வளாகத்தில் ஒரு மாற்றுத்திறனாளியால் நடத்தப்படும் ஆவின் பாலகம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஒருங்கிணைந்த சேவை மையத்தை திறந்து வைத்த முதல்வர், அங்கு மறுவாழ்வு சேவை பெற வருகை தந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் கலந்துரையாடினார்.
No comments:
Post a Comment