தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (8.11.2024) தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில், 29 மாவட்டங்களில், 141 அரசுப் பள்ளிகளில் 171.16 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 754 புதிய வகுப்பறைக் கட்டடங்கள், 17 ஆய்வகக் கட்டடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவிஷ்ய வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கான கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
மேலும், கருணை அடிப்படையில் 49 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனிற்காக பள்ளிகளில் இணைய வசதி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்து, தமிழகத்தின் கல்வித் தரத்தினை உயர்த்திட இல்லம் தேடி கல்வி, நம் பள்ளி நம் பெருமை, எண்ணும் எழுத்தும், நம்ம ஸ்கூல் பவுண்டேசன், பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு போன்ற சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துதல், பள்ளிகளின் வகுப்பறைக் கட்டடங்கள், குடிநீர் வசதி, கழிவறைகள், மின்சாதன வசதிகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், திறன் வகுப்பறைகள் அமைத்தல், காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, இன்றையதினம் முதலமைச்சர் அவர்களால் பள்ளிக்கல்வித் துறை சார்பில் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட கட்டடங்களின் விவரங்கள்:
பள்ளிக்கல்வித் துறை புதிய கட்டடங்கள்
பள்ளிக்கல்வித் துறை சார்பில், 29 மாவட்டங்களில், 141 அரசுப் பள்ளிகளில் 169 கோடியே 26 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 754 புதிய வகுப்பறைக் கட்டடங்கள், 17 ஆய்வகக் கட்டடங்கள் மற்றும் கழிப்பறை;
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ், கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் ஒன்றியம், பாச்சேரியில் 94 இலட்சத்து 71 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளிக் கட்டடம், பெரம்பலுர் மாவட்டம், ஆலந்தூர் ஒன்றியம், மலையப்ப நகரில் 95 இலட்சத்து 23 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவிஷ்ய வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளிக் கட்டடம்; என மொத்தம் 171 கோடியே 16 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கல்வித் துறை கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்குதல்
பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 49 நபர்களுக்கு, கருணை அடிப்படையில் 43 இளநிலை உதவியாளர்கள் மற்றும் 6 தட்டச்சர்கள் பணியிடங்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, வனத்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் திரு.நா. முருகானந்தம், இ.ஆ.ப., பள்ளிக்கல்வித் துறை செயலாளர் திருமதி. சோ. மதுமதி, இ.ஆ.ப., பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் பூ. ஆ. நரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment