அரசுப் பள்ளி ஆசிரியர் மாரடைப்பால் மரணம் - வகுப்பறையிலேயே உயிர் பிரிந்த சோகம் - Asiriyar.Net

Friday, November 8, 2024

அரசுப் பள்ளி ஆசிரியர் மாரடைப்பால் மரணம் - வகுப்பறையிலேயே உயிர் பிரிந்த சோகம்

 



ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர், மாரடைப்பில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி, சுண்டப்பூர் மலை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் அந்தோணி ஜெரால்ட் (49). புதன்கிழமை காலை பள்ளிக்கு வந்து வகுப்பு எடுத்த ஆசிரியர் அந்தோணி ஜெரால்ட், மதிய உணவு அருந்தியுள்ளார். அதன் பின், தொடர்ச்சியாக மாணவர்களுக்கு வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டு இருந்த போது, அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துள்ளார். அப்போது அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த ஆசிரியர்கள், கார் மூலம் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.


இதற்கிடையில், ஆசிரியர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், எதிரே வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், ஆசிரியரைப் பரிசோதித்தனர். இதில், அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு வந்த பர்கூர் போலீஸார், ஆசிரியரின் உடலை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.


அமைச்சர் இரங்கல்: ஆசிரியர் அந்தோணி ஜெரால்ட் மறைவுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஈரோடு மாவட்டம் அந்தியூர், சுண்டப்பூர் மலைக் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் அந்தோணி ஜெரால்ட் இறந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் தருகின்றது.


மலைக்கிராமத்தில் வசிக்கும் குழந்தைகளின் கல்விக்காக ஆசிரியர் பணியேற்று, உழைத்த அந்தோணி ஜெரால்ட், வகுப்பறையிலேயே, தன் கடைசி மூச்சையும் இழந்துள்ளார். அவரை இழந்து தவிக்கும் மாணவர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும், குடும்பத்தினருக்கும், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அவரின் ஆசிரியர் பணியால் பல அறிஞர்கள் தோன்றுவார்கள். அவரின் நினைவைப் போற்றுவார்கள்,’ என்று அவர் கூறியுள்ளார்.


பள்ளியில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர் மாரடைப்பில் உயர் இழந்த சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



No comments:

Post a Comment

Post Top Ad