ஆசிரியர் தகுதி தேர்வு, புதிதாக பணியில் சேருவோருக்கு மட்டுமல்ல, ஏற்கனவே பணியில் இருப்போருக்கும் கட்டாயம் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது... இது யாரையெல்லாம் பாதிக்கும்?
இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களும் எட்டாம் வகுப்பு வரை கட்டாயம் கல்வி கற்பதை உறுதி செய்யும் வகையில் கடந்த 2009 கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கல்வி கற்று தரும் ஆசிரியர்களுக்கும் தகுதியை நிர்ணயிக்கும் வகையில் Teachers Elgibility Test எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் 2011 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது.
இதன்படி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு பாடம் நடத்துதற்கு பணி அமர்த்தப்பட்டனர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில், ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தி வருகிறது. 2012 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் TET தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தாள் 1 மூலம் 1-5ஆம் வகுப்புகளுக்கான ஆசிரியர்களும், தாள் 2 மூலம் 6-8ஆம் வகுப்புகளுக்கான ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில்தான் ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம், 2011 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் தேதிக்கு முன்னர் பணிக்குச் சேர்ந்தவர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமில்லை என தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து சில ஆசிரியர் சங்கங்களும், தமிழ்நாடு அரசும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.
இதேபோல தங்களுக்கு டெட் தேர்வு பொருந்தாது என சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை நடத்துவோரும் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை விசாரித்த திபன்கார் தத்தா (Dipankar Datta) மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு அளித்துள்ள தீர்ப்புதான், தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதாக தெரிவித்த நீதிபதிகள், ஆசிரியர்கள் பதவி உயர்வுபெற டெட் தேர்ச்சி கட்டாயம் என்ற உத்தரவைப் பிறப்பித்தனர். இதுதவிர தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்கள் தங்கள் பணியில் நீட்டிக்க வேண்டுமானால் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற அதிரடி உத்தரவையும் பிறப்பித்தனர்.
கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அமலாகுவதற்கு முன்னர் பணி நியமனம் பெற்ற, 55 வயதுக்குக் கீழ் உள்ள ஆசிரியர்கள், பணியில் தொடர உச்ச நீதிமன்ற உத்தரவு வந்ததிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் டெட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் 2 ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெற முடியாதவர்கள் பணியிலிருந்து விலகலாம் அல்லது அவர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்படும் என தீர்ப்பு அளித்தனர்.
அதேநேரத்தில் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் பணியில் தொடர டெட் தேவையில்லை என்றும். ஆனால், பதவி உயர்வு பெற விரும்பினால் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் எனவும் தீர்ப்பளித்தனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஆண்டுக்கு இருமுறை தகுதி தேர்வை நடத்த வேண்டிய நிலையில் தமிழ்நாட்டில் இதுவரை 6 முறை மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. 2011க்கு முன்பு நடைபெற்ற பதவி உயர்வுகள் என்னாகும்? உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது.
No comments:
Post a Comment