அராசாணை 243 ஐ உடனடியாக அரசு ரத்து செய்ய வேண்டும் - ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல் - Asiriyar.Net

Saturday, November 2, 2024

அராசாணை 243 ஐ உடனடியாக அரசு ரத்து செய்ய வேண்டும் - ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

 



'மாநில அளவிலான பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு என்ற 243வது புதிய அராசணையால் ஆசிரியைகள் பதவி உயர்வை தவிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்,' என, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியது.


ராமநாதபுரத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகி ஆர்.சிவபாலன் கூறியதாவது: 2023 முடியும் தருவாயில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை எண்:243 ஆசிரியர்களில் 90 சதவீதம் பேரைக் கொந்தளிக்க வைத்து விட்டது. 


அரசாணையால் தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், ஆரம்பப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது.


பெண் ஆசிரியைகள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டிய நிலையால் குடும்ப நலன் கருதி தங்களது பதவி உயர்வை தவிர்க்க வேண்டியுள்ளது. எனவே அராசாணை 243 ஐ உடனடியாக அரசு ரத்து செய்ய வேண்டும். ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அளவில் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்.


தேர்தலின்போது அளித்த வாக்குறுதிப்படி ஆசிரியர், அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களைதல், சரண் விடுப்பு, ஊக்க ஊதியம் மீண்டும் வழங்குதல் உள்ளிட்ட 31 கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடந்துள்ளது. ஆனால் இதுவரை எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை.


பள்ளிகளுக்கு சென்று பாடம் நடத்தும் ஆசிரியர்களை வீதியில் இறங்கி போராட செய்தது மட்டுமே இந்த அரசின் சாதனையாக உள்ளது. ஆசிரியர், அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வூதிய முறை என்றைக்கு நிறைவேற்றப்படுகிறதோ அன்று தான் உண்மையான தீபாவளி. அதுவரை கொண்டாட்டங்களில் மகிழ்ச்சியில்லை. தொடர்ந்து போராட வேண்டிய நிலையில் உள்ளோம் என்றார்.


No comments:

Post a Comment

Post Top Ad