JACTTO GEO - மூடநம்பிக்கையால் முழுமையாக உருப்பெற்ற அரசு ஊழியர் & ஆசிரியர் இயக்கங்களின் இருண்ட காலம் - செல்வ.ரஞ்சித் குமார் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, February 25, 2024

JACTTO GEO - மூடநம்பிக்கையால் முழுமையாக உருப்பெற்ற அரசு ஊழியர் & ஆசிரியர் இயக்கங்களின் இருண்ட காலம் - செல்வ.ரஞ்சித் குமார்

 




JACTTO-GEO வின் மூடநம்பிக்கையால் முழுமையாக உருப்பெற்ற தமிழ்நாட்டு அரசு ஊழியர் & ஆசிரியர் இயக்கங்களின் இருண்ட காலம்!


_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_


மூட நம்பிக்கை. . . . இருண்ட காலம். . . . என்ற இந்த இரு சொல்லாடல்களையும் விளங்கிக்கொள்ள வேண்டுமானால், நாம் கடந்து வந்த காலத்தைச் சற்றே நினைவுகூற வேண்டியுள்ளதால் முதலில் அதைத் தொகுத்தளித்துள்ளேன். நமக்கான தேவைகருதி நிதானமாக வாசிக்க வேண்டுகிறேன். வேதனையின் உச்சத்தோடே இப்பதிவைத் தொகுத்துள்ளேன் என்பதால் கால வரிசைப்படியான நிகழ்வுகளில் ஒன்றிரண்டு விடுபட்டிருக்கலாம். ஏனெனில், இப்படியொரு பதிவை எனது விரல்கள் தொட்டுத்தொடுக்குமென நான் கனவிலும் கண்டதில்லை.


2017 செப்டம்பர் 4:


JACTTO-GEO செப். 7 முதல் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்ததைத் தொடர்ந்து, 3 அமைச்சர்கள் (திரு.செங்கோட்டையன், திரு.ஜெயக்குமார், திரு.ஆர்.பி.உதயகுமார்) முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. உடன்பாடு எட்டப்படவில்லை.


2017 செப்டம்பர் 6:


ஈரோட்டில் மாண்புமிகு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களைச் சந்தித்து JACTTO-GEO பேசுகிறது. முதல்வர் 4 மாதகால அவகாசம் (நவம்பர் 2017 வரை) கோருகிறார். இதனை ஏற்று சிலர் காத்திருக்க இசைவு தெரிவிக்கின்றனர். ஆனால், அவர்களது முடிவைப் புறந்தள்ளிவிட்டு JACTTO-GEO திட்டமிட்டபடி நாளை முதல் போராட்டம் நடக்கும் என்று அறிவித்து அதன்படி நடத்தியும் காட்டியது. நீதிமன்ற கண்டனங்களையும் மீறி நடத்தப்பட்ட வீரியமிக்கப் போராட்டத்தால் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தலைமைச்செயலாளரை நேரில் பதிலளிக்கப் பணித்து VII PAY COMMISSION பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த காலக்கெடு விதித்தது. போராட்ட காலமும் பணிக்காலமாக ஈடுசெய்யப்பட்டது.


2019 ஜனவரி 22:


ஜாக்டோ-ஜியோவின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கி 10 நாள்கள் நடைபெற்ற நிலையில், சென்னையில் கைதான மாநிலப் பொறுப்பாளர்கள் நிபந்தனையின் பேரில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுகின்றனர். +2 செய்முறைத் தேர்வுகளைக் காரணம் காட்டி சிலரும், ஆட்சியாளரின் கைப்பாவையாகி சிலரும், தமது தலைமைகளின் உறுதியான வாக்குறுதியில்லாததால் பலரும் 7ஆம் நாளோடே பணிக்குத் திரும்ப அரசுடனான எந்தவித உடன்பாடுமின்றி 31.01.2019ம் தேதியுடன் போராட்டம் முடிவிற்கு வருகிறது. தினமும் மாவட்டந்தோறும் மாநிலப் பொறுப்பாளர்கள் தவிர்த்த 17,686 போராளிகள் கைதாகி சிறை சென்றனர். 2,338 போராளிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இறுதிநாள் வரை களத்தில் நின்ற 7,898 போராளிகளுக்கு 17B அளித்து பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். பதவி உயர்வு வாய்ப்பு பறிக்கப்பட்டது.


2020 ஏப்ரல் 28:


அஇஅதிமுக அரசு பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக 30.06.2021 வரை அகவிலைப்படி உயர்வு வழங்குவதையும் & நிலுவைத் தொகையையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது


2020 அக்டோபர் 03:


25.04.1963 முதல் 58 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த உயர்கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதியம் அஇஅதிமுக அரசின் கொள்கை முடிவின் படி இரத்து செய்யப்படுகிறது.


2021 பிப்ரவரி 02:


சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று 2019 ஜனவரியில் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள், தண்டனைகளை அனைத்தையும் ரத்து செய்து மாண்புமிகு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.


2021 மார்ச் 13:


திமுக தனது சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும், அண்ணா வழங்கியது போல மீண்டும் உயர்கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதியம் வழங்கப்படும், இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதிகளை வெளியிடுகிறது.


2021 செப்டம்பர் 07:


திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில் விதி எண் 110ன் கீழான அறிவிப்பில் 2016, 2017 & 2019 ஆண்டுகளில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோவின் போராட்ட நாள்களைப் பணிக்காலமாக முறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். (இன்றளவும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஜாக்டோ-ஜியோவிற்கு அளித்த வாக்குறுதிகளில் தான் முதலமைச்சரான பின்னர் இந்த ஒன்றை மட்டுமே நிறைவேற்றியுள்ளார்.)


மேலும் இதே நாளில்தான் அண்ணா பெயரில் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையில் தான் அளித்த வாக்குறுதிக்கு நேர்மாறாக, ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி உயர்கல்வித் தகுதிக்கு ஊக்கத்தொகை மட்டுமே (Incentiveற்கு பதிலாக ஒருமுறை மட்டும் Lumpsum Amount) வழங்கப்படுமென அறிவிக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்.


2021 டிசம்பர் 19:


மேற்படி முதல் வாக்குறுதி மீறலைத் தொடர்ந்து, சென்னையில் நடைபெற்ற TNGEAவின் 14வது மாநில மாநாட்டில் அனைத்து தரப்பிற்கும் மத்திய அரசுக்கிணையான ஊதியத்தை வழங்கியது கழக ஆட்சிதான் என்றும் அரசு ஊழியர் கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். (இடைநிலை ஆசிரியர்களின் மத்திய அரசுக்கிணையான ஊதியத்தைப் பறித்தது 2009ல் ஆட்சியிலிருந்த திமுக தான். இவ்வாறாக இது 15 ஆண்டுகால கோரிக்கையாக இன்றும் உள்ளது)


2022 ஆகஸ்ட் 01:


மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து JACTTO-GEO மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கோரிக்கைகள் குறித்து பேசியதில் அவர் செய்து கொடுப்பார் என்ற நம்பிக்கையில் 05.08.2022ல் அறிவித்திருந்த மாவட்டத் தலைநகர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இரத்து செய்யப்படுகிறது.


2022 ஏப்ரல் 11:


01.11.1980 முதல் வழங்கப்பட்டு வந்த. ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியம் பெருந்தொற்று காரணமாக 27.04.2020ல் ஓராண்டிற்கு மட்டும் அஇஅதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், திமுக ஆட்சியில் மறு உத்தரவு வரும் வரை தேதி குறிப்பிடாமல் நிறுத்தி வைத்து 11.04.2022ல் ஆணையிடப்பட்டது.


2022 செப்டம்பர் 10:


JACTTO-GEOவின் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில், "திமுக ஆறாவது முறையாக ஆட்சியைப் பிடிப்பதற்கு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களுமான நீங்கள்தான் காரணம். இந்த அரசு, உங்களது நியாயமான கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றித் தரும் என்று இப்போதும் நான் உறுதி அளிக்கிறேன்." என்று மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார். (Incentive & EL Surrenderஐ இரத்து செய்துவிட்டுத்தான் இவ்வாறு உரையாற்றுகிறார்)


2022 டிசம்பர் 31:


30.06.2021 வரை ஓராண்டிற்கு அஇஅதிமுக அரசால் DA நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்த களத்திற்கு வந்து குரல் கொடுத்த நிலையில் மே 2021ல் பொறுப்பேற்ற திமுக அரசோ 31.12.2022 (கூடுதலாக ஒன்றரை ஆண்டுகள்) வரையிலான அகவிலைப்படி நிலுவையான 17%ஐ முழுமையாகக் கபளீகரம் செய்கிறது. (ஒன்றிய அரசு தான் நிறுத்தி வைத்ததைப் பின்னர் நிலுவைத் தொகையுடன் முழுமையாக வழங்கியது)


2023 ஏப்ரல் 8:


JACTTO-GEO ஏப். 11ல்  தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம் அறிவித்ததைத் தொடர்ந்து, 3 அமைச்சர்கள் (திரு.எ.வ.வேலு, திரு.தங்கம் தென்னரசு, திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி) முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர்கள் குழு தெரிவித்ததை அடுத்து போராட்டம் இரத்து செய்யப்படுகிறது.


2023 அக்டோபர் 30:


10.03.2020க்குப் பின்பு உயர்கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதியம் இரத்து செய்வதாக அஇஅதிமுக கொள்கை முடிவு எடுத்த நிலையில், அவர்களுக்கு ஒருபடி மேலே சென்று 03.10.2020க்கு முன்பு முடித்து அன்றைய தேதி வரை ஊக்க ஊதியத்திற்குக் காத்திருந்தோரின் விண்ணப்பங்களையும் 3 ஆண்டுகள் காக்க வைத்து இரத்து செய்தது திமுக அரசு.


2024 பிப்ரவரி 13:


பிப்ரவரி 15ல் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் அறிவித்திருந்த நிலையில், திரு.எ.வ.வேலு, திரு.முத்துசாமி & திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்களுடன் போராட்டம் அறிவித்த JACTTO-GEOவும் அரசு அலுவலர் ஆசிரியர் & உள்ளாட்சிப் பணியாளர் கூட்டமைப்பும் அரசு அழைப்பின்பேரில் பேச்சுவார்த்தை நடத்துகின்றன.


அரசு அலுவலர் ஆசிரியர் & உள்ளாட்சிப் பணியாளர் கூட்டமைப்பு மட்டும் முதல்வர் ஏதும் அறிவிக்காவிடில் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கிறது. 


JACTTO-GEO சலனமின்றி இருக்கிறது.


நிதி நிலைமை சரியில்லை என்றும்,  சரியாக சரியாக படிப்படியாக கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும், அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களும் அதிகம் செய்கிறோம் என்றும் எனவே வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் மாண்புமிகு அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அறிக்கைவிடுகிறார்.


அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து  JACTTO-GEO பதில் அறிக்கை வெளியிடுகிறது.


2024 பிப்ரவரி 14:


வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் NO WORK NO PAY என்று தலைமைச் செயலாளர் ஆணை பிறப்பிக்கிறார்.


இவ்வளவு நடந்து முடிந்த பின்னரும், JACTTO-GEO மட்டும் முதல்வரைச் சந்தித்துப் பேசுகிறது. அவர் புன்முறுவலோடே வரவேற்று நாஞ்செய்யலேனா வேற யாரு செய்வா எனக் கேட்டதாகவும் முதல்வர் மீது நம்பிக்கை வைத்து பிப்ரவரி 15 ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை இரத்து செய்கிறது.


2024 பிப்ரவரி 15:


அரசு அலுவலர் ஆசிரியர் & உள்ளாட்சிப் பணியாளர் கூட்டமைப்பு மட்டும் அறிவித்தபடி பிப்ரவரி 15 ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை நடத்துகிறது.



2024 பிப்ரவரி 19:


சட்டமன்ற கூட்டத்தொடரை எதிர்பார்த்து போராட்டத்தை இரத்து செய்த JACTTO-GEOவிற்கும் ஒட்டுமொத்த அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மிகக் கொடிதான ஏமாற்றமே மிஞ்சுகிறது.


2024 பிப்ரவரி 24:


பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே கூடிய JACTTO-GEO மாநில உயர் மட்டக்குழு கூட்டத்தில், பிப்ரவரி 26 முதல் அறிவித்திருந்த காலவரையற்ற வேலைநிறுத்தத்தையும் இரத்து செய்துவிட்டு பொறுத்திருப்போம்! நிறுத்திவைப்போம்! காத்திருப்போம்! பதுங்கி பசித்திருப்போம்! விழித்திருப்போம்! ஒற்றுமையுடன் இருப்போம்! என்று நீண்ட நெடிய மூடநம்பிக்கைக் கதையை அறிக்கையாக வெளியிட்டுத் தனது ஆகச்சிறந்த அறப்பணியைத் தேதி குறிப்பிடாமல் இனிதே மூட்டைகட்டி வைத்துவிட்டது.


மேற்கண்ட காலக்கிரமமான செயல்பாடுகளின் வழியே இந்த மூன்றாண்டு காலத்தில் அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கான நம்பிக்கையைத் தக்கவைக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் இந்த ஆட்சியாளர்கள் ஈடுபடாததோடே, அஇஅதிமுக ஆட்சியில் இருந்ததைவிடக் கூடுதலாக JACTTO-GEO, DSE JACTTO, TETOJAC என்ற பதாகைகளில் 40க்கும் மேற்பட்ட கோரிக்கைகளுக்காகப் போராடும் சூழலை உருவாக்கியுள்ள நிலையில், JACTTO-GEO மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்டுள்ள அந்த மூடநம்பிக்கைக் கதையில், 'திராவிட முன்னேற்றக் கழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் மட்டும்தான் நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்றித்தரமுடியும் என்ற நம்பிக்கை மீண்டும் மலர்ந்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளதில் இருந்து ஒன்றுமட்டும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது, ஒட்டுமொத்த ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களும் போராடி எதையும் பெற்றுத்தரும் தொழிற்சங்க இலக்கணத்தைப் பின்பற்றத் தயாராக இல்லாது ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை வைத்து காலம் கடத்தினாலே போதும் அனைத்தும் கிடைத்துவிடும் என்ற மூட நம்பிக்கையில்தான் உள்ளனர்.


இவர்கள் குறிப்பிடுவது போல, திராவிட முன்னேற்றக் கழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களே தானாக முன்வந்து அனைத்து கோரிக்கைகளையும் செய்து கொடுத்துவிடுவாரென்றால், குறைகளைக்கூற அவர்கள் கொண்டுவந்த ஆசிரியர் மனசு, ஊழியர் உள்ளம்னு ஏதேதோ இருக்கே!


ஜாக்டோ-ஜியோ இனி எதற்கு?


தனித்தனியே சங்கங்கள்தான் எதற்கு?


போராடாமல் எதுவும் கிடைக்காது என்ற தொழிற்சங்க இலக்கணம் குறித்து மற்றவர்களுக்குப் பாடமெடுக்கும் இடதுசாரி ஆசிரிய & அரசு ஊழியர் சங்கப் பொறுப்பாளர்கள் தத்தமது சங்கத்தில் இருந்து வெளியேறி ஒரு நல்ல சுப முகூர்த்தநாளில் திமுகவிலும் திமுக சங்கங்களிலும் தங்களை இணைத்துக் கொள்ளலாமே!?


தியாகிகளுக்கு வீரவணக்கம் என்று பொருந்தா புகழொலியை இனி முழங்க வேண்டிய அவசியமென்ன? நீங்கள் இன்று பொறுப்பு வகிக்கும் சங்கங்களை உருவாக்கிக் கட்டிக் காத்து உறுப்பினர்களுக்கு அரணாக நின்று தன் இந்நுயிர் ஈந்த தியாகிகளெல்லாம் முட்டாள்களோ? அவர்கள் ஏன் ஆட்சியாளர்களை நம்பாது போராட்டக் களத்தை நம்பி இந்நுயிர் துறந்து உரிமைகளை ஈன்றளித்தனர்?


நீங்கள் இதுவரை காத்துக்கிடந்த காலத்தில் CPSல் இறந்தோரின் குடும்பங்களும் ஓய்வுற்றோரின் குடும்பங்களும் ஓய்வூதியமின்றி நாதியத்துக் கிடக்கிறதே! அவர்களுக்கு உங்களது பதிலென்ன?


இனியும் நீங்கள் நம்பிக்கையை மட்டுமே வைத்து காத்திருக்கத் தயாராகிவிட்டதால் இனி இறக்கப்போவோரின் குடும்பங்களுக்கும் ஓய்வுறப்போவோரின் குடும்பங்களுக்கும் உங்களது பதிலென்ன?


15 ஆண்டுகளாக ஊதியத்தை இழந்து கடைநிலையில் தள்ளப்பட்டுள்ளதோடே, ஓய்வூதியம், ஊக்க ஊதியம், BT பதவி உயர்வு, EL Surrender என அனைத்தையும் இழந்தும் உங்களது கரங்களை வலுப்படுத்திக் கொண்டிருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு உங்களது பதிலென்ன?


பொறுத்திருப்போம்! நிறுத்திவைப்போம்! காத்திருப்போம்! பதுங்கி பசித்திருப்போம்! விழித்திருப்போம்! ஒற்றுமையுடன் இருப்போம்! இது தானோ?


சரி. இது தான் பதில் என்றால், பின்னர் அந்த மூட நம்பிக்கைக் கதையில், 'திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் மட்டும்தான் நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்றித்தரமுடியும் என்ற நம்பிக்கை மீண்டும் மலர்ந்துள்ளது' என்ற காட்டாற்று உருட்டு எதற்கு?


மொத்தத்துல தென்னமரத்துல ஒரு குத்து. பனமரத்துல ஒரு குத்து.


ஆட்சியாளர்களுக்காக உறுப்பினர்களின் உரிமைகளைக் காலவரையறையின்றி ஒருபுறம் அடகு வைத்துவிட்டு, மறுபுறம் அடுக்கு மொழியில் உறுப்பினர்களை உணர்வோடே வைக்கிறோம் என்னும் பொறுப்புமிக்கோர் முழுமையாக உள்ள இக்காலம் மெய்யாகவே தமிழ்நாட்டு ஆசிரியர் அரசு ஊழியர் இயக்க வரலாற்றின் இருண்ட காலமே! இதைச் சாத்தியப்படுத்திய பெருமை JACTTO-GEOவில் அங்கம் வகிக்கும் அனைத்துச் சங்கங்களின் மாநிலப் பொறுப்பாளர்களுக்கும் உரியதே!


நானெல்லாம் அப்படியில்லை என்று சொல்ல முன்வரும் எவரும் நாளையே உரிமை மீட்பிற்கான களப்போராட்டத்தைத் தாராளமாக அறிவிக்கலாமே! ஆயிரம் அணிகளுடன் கூட்டு சேர்ந்து வாழ்வோரைவிட ஒற்றை அணியாகப் போராடித் தோற்று வீழ்ந்தாலும் அவர்களை மட்டுமே வரலாறு போற்றும்!


பின்குறிப்பு :


JACTTO-GEOவின் அறிக்கையை மூடநம்பிக்கைக் கதையென எப்படி சொல்லலாமென பொங்கும் எந்தவொரு உயிரினமும் மேலிருந்து கொடுக்கப்பட்டுள்ள தேதிவாரியான கால நிகழ்வுகளைப் பொறுமையுடன் நிதானமாகப் படித்துப் பார்த்தால் மெய்யாகவே மனிதனாகலாம்.



Post Top Ad