பதவி உயர்வில் 4% இடஒதுக்கீடு - மாற்றுத்திறனாளி அரசு அலுவலர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, February 18, 2024

பதவி உயர்வில் 4% இடஒதுக்கீடு - மாற்றுத்திறனாளி அரசு அலுவலர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

 மாற்றுத்திறனாளிகள் நலன்களுக்காகவும், சமூக நீதிக்காக பாடுபடும் தமிழக அரசு, மாற்றுத்திறனாளி அரசு அலுவலர்களுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு கட்டாயம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 2021-ல் தீர்ப்பளித்தும் தமிழகத்தில் இதுவரை நடைமுறைப் படுத்தாதால் மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். 


தமிழக சட்டப்பேரவையில் அறிவிப்பாரா என எதிர்பார்த்துள்ளனர் மாற்றுத்திறனாளி அரசு அலுவலர்கள்.


இந்திய நாடாளுமன்றத்தில் 1995-ம் ஆண்டு இயற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சட்டம் பிரிவு 34-இன் படி மாற்றுத்திறனாளிகளின் சம உரிமை பாதுகாக்கப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடந்த வழக்கில் 2021-ல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இறுதித் தீர்ப்பை மூன்று நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் வழங்கியது. 


அதன்படி மத்திய அரசு பணியிலுள்ள மாற்றுத் திறனாளி அலுவலர்களுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இத்தீர்ப்பை ஏற்று ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் உள்பட பல மாநிலங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.


ஆனால், சமூக அக்கறையுடன் வழங்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பை தமிழகத்தில் சமூக நீதியை காக்கும் திமுக அரசு இதுவரை செயல்படுத்தாமல் உள்ளது. இதனால் சில மாற்றுத் திறனாளி அரசு அலுவலர்கள் சென்னை, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். 


இந்த வழக்கின் முக்கியத்துவம் உணர்ந்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி, தமிழகத்தில் அரசு பணியில் இருக்கும் மாற்றுத்திறனாளி அலுவலர்களுக்கு பதவி உயர்வில் 4 % இட ஒதுக்கீடு 3 மாதத்திற்குள் வழங்க வேண்டும் என 2023 ஜனவரியில் தீர்ப்பு வழங்கினார். ஆனால் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவேண்டிய தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை நடைமுறைப்படுத்தாமல், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. ஆனால் 7 மாதமாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசு வாய்தா வாங்கி வருகிறது.


இதனால் தமிழகத்திலுள்ள மாற்றுத்திறனாளி அரசு அலுவலர்கள் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் தங்களுக்கு நீதி மறுக்கப்படுவதாக மன வேதனையுடன் உள்ளனர்.


இதுகுறித்து மாற்றுத்திறனாளி அரசு அலுவலர்கள் கூறியதாவது: “உடலில் ஊனமுடையவர்களை வார்த்தைகளில் கூட ஊனப்படுத்தி விடக்கூடாது என எண்ணிய முன்னாள் முதல்வர் கருணாநிதி, உடல் ஊனமுற்றவர்களை மாற்றுத்திறனாளிகள் என அழைக்க அரசாணை பிறப்பித்தார். 


அவரது கொள்கை வழியில் செயல்படுவதாக கூறும் தமிழக அரசு மாற்றுத்திறனாளி அரசு அலுவலர்களுக்கு 4% இட ஒதுக்கீட்டில் பதவி உயர்வு வழங்க மறுப்பதன் காரணம் புரியவில்லை. தமிழக முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நலத்துறை உயரதிகாரிகள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று மாற்றுத்திறனாளிகளுக்கும் சமூக நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.” என்றனர்.


Post Top Ad