பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழக அரசின் 2024-25ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதன்படி, 2 மணி நேரம் 7 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்து அமைச்சர் தங்கம் தென்னரசு நிறைவு செய்தார்.
இந்த பட்ஜெட்டில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி, மருத்துவம், உள் கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதுமட்டுமில்லாமல், இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களுக்கான புதிய திட்டங்கள், சலுகைகள் மற்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
அந்தவகையில், அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 இளைஞர்களுக்கு அரசு பணி வழங்கப்படும் என பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். ஜூன் மாதத்திற்குள் 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் இதுவரை 60,567 இளைஞர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர் மற்றும் தூத்துக்குடியில் நியோ டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் இதன் மூலம் 13,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் அமைச்சர் அறிவித்தார். இதுபோன்று, கோவையில் 20 லட்சம் சதுர அடியில் ரூ.1100 கோடி செலவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்றார்.
இதனிடையே, 500க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவரைப் பணியில் அமர்த்தும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஊதிய மானியம் வழங்கப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 500 மகளிரை பணியமர்த்தவுள்ள நிறுவனங்களுக்கு அவர்களின் ஊதியத்தில் 10% அரசே வழங்கும் என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment