சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் ரூ.17 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு ஓய்வு இல்லத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (21.2.2024) தலைமைச் செயலகத்தில், பொதுத்துறை சார்பில் சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் 17 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 59 அறைகள் கொண்ட அரசு ஓய்வு இல்லத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அரசு அலுவலகப் பணி நிமித்தமாக சென்னைக்கு வருகை புரியும் அரசு அலுவலர்கள் தங்குவதற்கு ஏதுவாக சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் இருந்த அரசு ஓய்வு இல்லம் இடிக்கப்பட்டு, அவ்விடத்தில் பொதுத்துறை சார்பில் 37,484 சதுர அடியில், நான்கு தளங்களுடன் 17 கோடி ரூபாய் செலவில் புதிதாக அரசு ஓய்வு இல்லம் கட்டப்பட்டுள்ளது.
இப்புதிய அரசு ஓய்வு இல்லம், 4 தளங்களிலும் குளிர்சாதன வசதியுடன் 59 அறைகள், வாகனம் நிறுத்துமிடம், சமையல் அறை, உணவு பாதுகாப்பு அறை, விருந்தினர்கள் பயன்பாட்டிற்காக இரண்டு மின் தூக்கிகள் போன்ற பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, பொதுத்துறை செயலாளர் கே.நந்தகுமார், மற்றும் பொதுத்துறை துணைச் செயலாளர் (மரபு) திருமதி ஜெ.இ. பத்மஜா, ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment