‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தால் எக்கச்சக்க நெருக்கடி - கலங்கி நிற்கும் பள்ளி ஆசிரியர்கள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, February 18, 2024

‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தால் எக்கச்சக்க நெருக்கடி - கலங்கி நிற்கும் பள்ளி ஆசிரியர்கள்

 




- இந்து தமிழ்

தமிழக பாடத்திட்டத்தில், கல்வியாண்டு மூன்றாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பருவத்துக்கும் மாணவர்களுக்கு தனித்தனியே புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு வரை ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு பருவத்துக்கும் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை தனித்தனியே, வாரத்துக்கு நான்கு பாடத்தொகுப்பு என தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு கையேடு வழங்கப்பட்டு வந்தது.


ஆசிரியர்கள் இந்தக் கையேட்டைப் பயன்படுத்தியே கற்பித்தல் பணியை மேற்கொள்ள வேண்டும் என தமிழகம் முழுவதும் அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. நிகழ் கல்வியாண்டில் நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்புக்கும் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் விரிவுபடுத்தப்பட்டு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடங்களுக்கும் ஆசிரியர்களுக்கு தனித்தனியே கையேடு வழங்கப்பட்டு அதைப் பின்பற்றுகிறார்களா என்பதை கல்வித்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


“இந்த கையேட்டை மையப்படுத்தி கற்றல் பணி மேற்கொள்ளப்படுவதால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாட நூல்களின் பயன்பாடு வெகுவாக குறைந்து விட்டது” என்று கடலூர் மாவட்ட அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.


‘எண்ணும் எழுத்தும்’ முறை என்பது விளையாட்டு முறையை பின்பற்றி கற்பித்தல் என்பதால் ஒன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு மட்டுமே இந்த முறை சாத்தியப்படும். மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களைக் கொண்டு கற்பித்தல் பணி மேற்கொள்ளப்பட்டால் மாணவர்கள் பாட நூல்களை நன்கு வாசிக்க செய்துவடன், வினா, விடைகளை எழுதச் செய்வதின் மூலம் அவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த முடியும்.


கையெழுத்துப் பயிற்சியும் மாணவர்களுக்கு அளிக்க இயலும். எனவே ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் மூலம் வழங்கப்படும் ஆசிரியர் கையேட்டை உள்வாங்கிக்கொண்டு, பழைய நடைமுறையில் பாட நூல்களைக் கொண்டு கற்பித்தல் பணி மேற்கொள்ளும் வகையில் உரிய உத்தரவுகளை பள்ளிக்கல்வித் துறைப் பிறப்பிக்க வேண்டும்.


பாடங்களை வாசிப்பதும், பிழையின்றி எழுதுவதும் தொடக்கப் பள்ளியின் அடித்தளமாக இருந்த நிலை மாறி, தற்போது கல்வித்துறை வழங்கியுள்ள கையேடுகளில் குறிப்பிட்டுள்ளபடி கற்பித்தல் பணியை மேற்கொள்வதால், ஆசிரியர்களுக்கு வேலை பளு அதிகமாகிறது.


போதிய நேரம் இல்லை: “திருப்புதல் பணியை மேற்கொள்வதற்கோ, மாணவர்களை வாசிக்கச் சொல்லி பயிற்சி கொடுப்பதற்கோ போதிய கால அவகாசம் இருப்பதில்லை. ஒவ்வொரு நாளும் ஆசிரியர் கையேட்டில் குறிப்பிட்டுள்ள பாடங்களை நடத்துவதற்கே போதிய நேரம் இருப்பதில்லை.


‘அடுத்த நாள்.. அடுத்த பாடம்..’ என ஆண்டு முழுவதற்கும் கற்பித்தல் பணியை கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்து அனுப்பியுள்ள நிலையில், முதல் நாள் நடத்திய பாடங்களை திருப்புதல் செய்வதற்கு போதிய நேரம் இருப்பதில்லை.


ஆசிரியர் கையேட்டில் உள்ள, ‘அரும்பு’, ‘மொட்டு’, ‘மலர்’ என்ற கற்றல் நிலை படிப்படியாக உயர்ந்து அன்றைக்கு கற்பித்த பாடங்களை முழுவதும் அறிந்து கொண்ட வகுப்பு நிலைக்கு மாணவர்களைக் கொண்டு வர ஒரு நாள் போதாது. அந்த நிலைக்கு மாணவர்களை கொண்டு வராத ஆசிரியர்களை அதிகாரிகள் கடிந்து கொள்ளும் நிலையும் பல்வேறு இடங்களில் உள்ளன. இதனால் நாங்கள் மன அழுத்தத்துக்கும் , உடல் சோர்வுக்கும் ஆளாகிறோம்” என்று பெயர் குறிப்பிட விரும்பாத கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.


“மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாட நூல்களை மையமாகக் கொண்டு கற்பித்தல் பணி மேற்கொண்டால், மாணவர்கள் பள்ளியில் ஒருமுறை, வீட்டுக்குச் சென்று ஓரிரு முறை என பாட நூல்களை வாசிப்பதன் மூலம் வாசிப்புத் திறன் மேம்படும். பிழையின்றி எழுத மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க இயலும். இதனால் மாணவர்கள் உயர் வகுப்புகளில் சிறந்து விளங்க முடியும்” என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.


இது பற்றி சிதம்பரத்தைச் சேர்ந்த் ஓய்வு பெற்ற உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ராகவன் தெரிவித்ததாவது: பழைய நடைமுறையில் வாசிப்புத் திறன் மேம்பட்டது, அதனால் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கினார்கள்.


தற்போது அரசு கொண்டு வந்துள்ள ‘எண்ணும் எழுத்தும்’ போன்ற திட்டங்கள் ஆசிரியர்களுக்கு வேலை பளுவை ஏற்படுத்தி மன உளைச்சலை ஏற்படுத்துவதாக இருக்கிறதே தவிர, மாணவர்களின் திறனை மேம்படுத்துவதாக தற்போதைய கல்வி முறை இல்லை. இந்த நிலையை கல்வித்துறை உணர்ந்து கொண்டு மாணவர் நலன் சார்ந்த செயல்பாடுகளை அமல்படுத்த முன் வர வேண்டும்” என்கிறார்.




கடலூர், சிதம்பரம் பகுதியில் உள்ள அரசு, அரசு சார் பள்ளிகளில் பணியாற்றும் பல ஆசிரியர்களின் கருத்து இவ்வாறே இருக்கிறது. தனியாக ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை ஆராய்ந்து பார்த்தால் அது, நல்லதொரு செயல்வழி கல்வித் திட்டமே. ஆனால், குறைந்த ஆசிரியர்கள், குறைவான காலக்கெடுவே உள்ளது.


நடப்புக் கல்வியோடு, இதையும் சேர்த்து அதற்கான நெருக்கடியை தரும் போது ஆசிரியர்கள் திக்குமுக்காடிப் போகின்றனர். நல்லத் திட்டங்களைக் கொண்டு வந்தாலும், அதை திட்டமிட்டு செயல்படுத்தாமல் ஒருவித நெருக்கடி தரும் போது, அது ஏற்கெனவே இருக்கிற வளர்ச்சியையும் பாதிக்கும்.எந்தத் துறைக்கும் பொருந்தும் அனுபவ பாடம் இது.


‘எண்ணும் எழுத்தும்’ விஷயத்தில் இதை பள்ளிக்கல்வித் துறை உணர்ந்து செயல்படுவது அவசியம்.


Post Top Ad