தேர்வு நோக்கில் மற்ற பாடங்களைப் படிப்பதற்கும் தமிழ் பாடத்தைப் படிப்பதற்கும் அடிப்படையில் சில வேறுபாடுகள் உண்டு. தமிழ்ப் பாடத்தில் பிழைகளால் மதிப்பெண்களை இழக்க நேரிடும். முதன்மையான ஒற்றுப் பிழைகள் அதிகம் இருந்தால் மதிப்பெண் நிச்சயம் குறையும்.
மயங்கொலிப் பிழைகள் ஒருமை பன்மை குறித்த கருத்துப் பிழைகள் வாக்கிய அமைப்பு போன்றவைகள் விடைத்தாள் திருத்துபவருக்குப் பளிச்செனத் தெரியும். எனவே தமிழ் மொழிப் பாடத்தை நன்கு புரிந்து கொண்டு படிப்பதுடன் அவற்றை விடைத்தாளில் கவனமாகப் எழுதினால் சிறு பிழைகளால் நேரும் ஓரிரு மதிப்பெண் இழப்பைத் தவிர்க்கலாம்.
மனனப் பாடப்பகுதிக்கு புத்தகத்தில் கொடுத்திருப்பது போல சீர் மற்றும் அடி மேற்கோள் குறி இடுவது போன்ற பிழைகள் இல்லாது கவனமாக எழுத வேண்டும்.
பகுபத உறுப்பிலக்கணம், இலக்கணக் குறிப்பு, புணர்ச்சி விதி, மொழிப் பயிற்சி தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில் பெரும்பாலான மாணவர்கள் மாற்றி விடை எழுதுகின்றனர். சராசரியாக படிக்கும் மாணவர்கள் இப்பகுதியில் அதிகம் தவறு செய்தனர்.
திணை,துறை அணி, நயம் பாராட்டல், பழமொழி, கவிதை எழுதுதல், எண்ணங்களை எழுத்தாக்குக போன்ற வினாக்களுக்கு விடையளிக்கையில் சுருக்கமாக எழுதுவதை தவிர்த்து திருத்தும் ஆசிரியர்களுக்கு மதிப்பெண் வழங்கும் நோக்கில் விடையளிக்க வேண்டும்.
அதே வேளையில் வினாத்தாளில் கேட்கப்பட்டதை விட கூடுதல் வினாக்களுக்கு விடை யளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.விடைத்தாள் திருத்துபவர் முதல் வினாவில் இருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விடைகளுக்கு மட்டுமே மதிப்பெண் அளிப்பார்.
அடுத்து எழுதப்பட்ட விடைகள் மிகச் சரியாக இருந்தாலும் அவற்றிக்கு மதிப்பெண் கிடைக்காது. வினா வாரி மதிப்பெண் விவரங்கள் அடங்கிய “வினாத்தாள் வடிவமைப்பு” குறித்து மாணவர்கள் அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம்.
அதோடு குறைந்த பட்சம் ஐந்து அல்லது ஆறு பொதுத்தேர்வு வினாத்தாள்களை எடுத்து வைத்துக்கொண்டு கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் விடை அளித்து பாருங்கள். இந்த பயிற்சி உங்களுக்கு அதிக மதிப்பெண்கள் கிடைக்க உதவியாக இருக்கும் எந்த கேள்வியைப் படித்தாலும் சந்தேகம் இல்லாமல் நிறைவாக படித்துக் கொள்ளுங்கள்.
அப்போதுதான் விடை அளிக்கும் போது குழப்பம் ஏற்படாது. மொழிப்பயிற்சி வினா மற்றும் ஒரு மதிப்பெண் வினாவை கடைசியாக ஒரு தடவை நீங்கள் படித்த பாடத்திலிருந்து மீள் பார்வை செய்து கொள்ளுங்கள். செய்யுள் உரைநடை விரிவானம் போன்ற பாடத்தின் பின்பகுதியில் இருந்தும் ஏனைய வினாக்கள் பாடத்தின் உள்ளிருந்தும் கேட்கப்படுவதால் நன்றாக படிப்பவர்களுக்கும் அவற்றில் ஓரிரு மதிப்பெண் இழக்க வாய்ப்பு உண்டு.
எனவே இரண்டு மற்றும் நான்கு மதிப்பெண் வினாக்களை சரியாக தேர்ந்தெடுத்து உரிய தலைப்பிட்டு விடையளிப்பதும் நெடுவினாவுக்கு குறிப்புச் சட்டம் முன்னுரை ஆகியவற்றோடு உள் தலைப்புகளுக்கு பதில் அளித்து முடிவுரையுடன் முடிப்பது முழு மதிப்பெண் தரும்.
இதே போன்று பாடத்தின் பின்பகுதியில் உள்ள மொழிப்பயிற்சி வினாக்களில் பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுவது ,பிறமொழிச் சொற்களை தமிழாக்குக, மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுவது, கலைச்சொல்லாக்கம் தருவது போன்ற வினாக்களுக்கு அதிக திருப்புதல் அவசியம்.
வெற்றி பெற வாழ்த்துகள்
வே. போதுராசா,
முதுகலை ஆசிரியர்- தேனி
No comments:
Post a Comment