ஆசிரியர்களை கண்காணிக்கும் பள்ளிக்கல்வி துறை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, February 8, 2024

ஆசிரியர்களை கண்காணிக்கும் பள்ளிக்கல்வி துறை

 ஆசிரியர் அமைப்புகளின் போராட்ட அறிவிப்புகளை தொடர்ந்து, ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் சமூக வலைதள பதிவுகளை கண்காணிக்க, பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


அரசு ஊழியர்கள் மற்றும் அரசு நியமன ஆசிரியர்களின் சங்கங்கள் இணைந்து, ஜாக்டோ ஜியோ என்ற கூட்டமைப்பாக செயல்படுகின்றன. தொடக்க கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும், அரசு தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர்களின் சங்கங்கள் இணைந்து, டிட்டோ ஜாக் என்ற கூட்டமைப்பாக செயல்படுகின்றன.


இந்த கூட்டமைப்புகளின் சார்பில், வரும், 15ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தமும், வரும், 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டமும் மேற்கொள்வது என, அறிவிக்கப்பட்டுள்ளது.


இதில், ஜாக்டோ ஜியோ மற்றும் டிட்டோ ஜாக் கூட்டமைப்புகள் ஈடுபடுகின்றன. இதற்கிடையில், சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு, இடைநிலை ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், வரும் 12ம் தேதி, முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


பொது தேர்வுகள் நெருங்க உள்ளதால், ஆசிரியர்களின் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர, பள்ளிக்கல்வி துறை ஆலோசித்து வருகிறது. இதற்காக ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளில், நிதி செலவில்லாத அம்சங்களை பட்டியல் எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன.


மேலும், போராட்டம் தொடர்பாக, ஆசிரியர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள், சமூக வலைதளங்களில் பதிவு செய்யும் தகவல்களை, பள்ளிக்கல்வி அதிகாரிகள் கண்காணிக்க துவங்கியுள்ளனர்.


போராட்டம் எப்படி நடத்த போகின்றனர்; போராட்டத்துக்கு எந்த வகையில் பிரசாரம் செய்யப் படுகிறது; போராட்டம் அமைதியாக நடக்குமா என்பன போன்றவற்றை தெரிந்து கொள்ள, ஆசிரியர் சங்கங்களின் சமூக வலைதள பக்கங்களை கண்காணிக்கும் பணி துவங்கியுள்ளது.


சங்க நிர்வாகிகளின் சமூக வலைதள பக்கங்களில் உள்ள ஆசிரியர்கள் வழியே, சங்க நடவடிக்கைகளை தெரிந்து கொள்ளவும், பள்ளிக்கல்வி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Post Top Ad