பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் வருகிற 15ம் தேதி அடையாள வேலைநிறுத்தம் நடத்துவதாக அறிவித்துள்ளார்கள்.
தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் த.அமிர்தகுமார், பீட்டர் அந்தோணிசாமி, கே.கணேசன் உள்ளிட்டோர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசு தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மீண்டும் சரண் விடுப்பு சலுகை, 7வது ஊதிய குழு நிர்ணயத்தில் 21 மாத நிலுவை தொகை, இடைநிலை மற்றும் முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைதல், தலைமை செயலகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் காலி பணியிடங்களை நிரப்பி, பதவி உயர்வு, சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட அனைத்து துறை துப்புரவு பணியாளர்கள், பண்ணை பணியாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைவரையும் பணி நிரந்தரம் செய்வது,
12,527 ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்களுக்கு காலமுறை ஊதியம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தனியார் பணி நியமனம் செய்திடும் அரசாணையை உடனடியாக ரத்து செய்வது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 15ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்தப்படும்.
அப்படியும் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் வருகிற 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment