நெல்லையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண ரூ.350 கோடியில் நாகர்கோவில் – தென்காசி – சங்கரன்கோவில் – மதுரை சாலைகளை இணைக்கும் சுற்றுச்சாலை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.
இதற்கான நில எடுப்பு பிரிவில் தாசில்தாராக பணியாற்றுபவர் செல்வகுமார். இவர் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் அவரது கட்சி கூட்டங்களில் கலந்து கொண்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.
நாம் தமிழர் கட்சியின் சில கூட்டங்களில் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் பரவியது. இது தொடர்பாக கலெக்டர் கார்த்திகேயனுக்கு புகார்கள் சென்றன.
இதன் அடிப்படையில் தாசில்தார் செல்வகுமாரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். மேலும் துறை ரீதியான விசாரணை நடத்தவும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
தாசில்தார் செல்வகுமாரின் மனைவி சத்யா நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மக்களவைத் தேர்தலில் நெல்லை தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார். தாசில்தார் நாம் தமிழர் கட்சியுடன் தொடர்பில் இருந்ததாக எழுந்துள்ள புகார் வருவாய் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment