தேர்தல் மற்றும் அரையாண்டு விடுமுறை உள்ளிட்ட காரணங்களால், பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விட்டதால், பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கோடை விடுமுறைக்குப்பிறகு, ஜூன் மாதம் திறக்கப்பட்ட பள்ளிகளில் காலதாமதமாக வந்த புத்தகங்களால் பாடம் நடத்தும் பணிகள் பாதிக்கப்பட்டது. காலாண்டுத்தேர்வுக்கு பிறகு மழை காரணமாகவும் பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டது.நவ., - டிச., மாதங்களில் மட்டுமே பள்ளிகள் சீராக இயங்கின. தற்போது அரையாண்டு விடுமுறை விடப்பட்ட நிலையில், தேர்தல் ஓட்டு எண்ணிக்கை காரணமாக கூடுதலாக இரண்டு நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. வரும் 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் விடுமுறை நீட்டிக்கப்பட்டு நாளை (6ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படுகிறது.தொடர்ந்து, இம்மாதம் பொங்கல் விடுமுறை, ஐந்து நாட்கள் வருகின்றன. இவ்வாறு, தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கும்பட்சத்தில், பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்துவதற்கான நாட்கள் மிக குறைவாக இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும், ஜன., இறுதியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு செய்முறை தேர்வுகள் வருகின்றன. இதற்கிடையில் பாடங்களை மீண்டும் மறுமுறை குறிப்புகள் வழங்குவது என்பது இயலாத காரியம். இதனை ஈடுகட்ட சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்பட்டாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.