கற்றல் திறனை வளர்க்குமா அடிப்படைக் கல்வி? - Asiriyar.Net

Monday, January 27, 2020

கற்றல் திறனை வளர்க்குமா அடிப்படைக் கல்வி?





கற்றல் திறனை வளர்க்குமா அடிப்படைக் கல்வி?

அரசு நடத்தும் அங்கன்வாடிகளும், விளையாட்டுப் பள்ளிக்கூடங்களும் குழந்தைகளுக்கு வலுவான கல்வி அடிப்படைகளைக் கற்றுக்கொடுப்பதில் பின்தங்கியுள்ளன என்று 2019-க்கான 'அசர்' ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கல்விக் கொள்கையில் மாநிலங்களுக்கு இடையிலான வேறுபாடுகளையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது.

முறையான கல்வி பெறக் குழந்தைகளின் குறைந்தபட்ச வயது 6 என்று அரசு நிர்ணயித்திருக்கிறது. ஆனால், 6 வயது நிரம்பாத குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்ப்பது அதிகமாக இருக்கிறது. எந்த வயதில் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும் என்பதில் மாநிலங்கள் கண்டிப்பான விதிகளை வைத்திருக்கவில்லை.

இதனால், அரசுப் பள்ளிக்கூடங்களில் 4 வயது, 5 வயது மாணவர்கள் சேர்ந்து படிப்பது மொத்த மாணவர் எண்ணிக்கையில் 25%-ஆக இருக்கிறது. தனியார்ப் பள்ளிக்கூடங்களில் குறைந்த வயது மாணவர்கள் சேர்வது 15%-ஆக இருக்கிறது. மேலும், அங்கன்வாடிப் பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகளின் கற்றல் திறன், தனியார்ப் பள்ளிக் குழந்தைகளுக்கு ஈடாக இல்லை. முறையாக வடிவமைக்கப்பட்ட வகுப்பறைச் சூழல் இருந்தால் மட்டுமே பிள்ளைகளின் கற்றல் திறன் நன்றாக இருக்கிறது.

அரசுப் பள்ளிகளில் இரண்டாம் வகுப்பில் படிக்கும் ஏழு வயது மாணவர்களில் மூன்றில் இரண்டு பங்கினருக்கு முதல் வகுப்புப் பாடப் புத்தகத்தையே படிக்கத் தெரியவில்லை. மூன்றாவது வகுப்பில் பயிலும் மாணவர்கள் முதல் வகுப்புப் பாடப் புத்தகங்களைச் சுமாராகவே வாசிக்கின்றனர். கூட்டல், கழித்தலிலும் இதே நிலைமைதான். அரசுப் பள்ளிக்கூடங்களைவிடக் குறைவான ஊதியம் பெறும் ஆசிரியர்கள் பணிபுரியும் தனியார்ப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறன் சற்றே கூடுதலாக இருப்பதை இந்த அறிக்கை தெரிவிக்கிறது. 3 வயது முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு அளிக்கப்படும் கல்வி, மிகவும் வலுவற்ற அடித்தளத்தில் தொடங்குகிறது, கற்பனைத் திறனுடன் கற்பதற்கு இதில் வாய்ப்பே கிடையாது.

அரசின் நிர்வாக அமைப்பு தன்னுடைய பங்குக்கு நன்கு பயிற்சி பெற்ற, லட்சியமுள்ள ஆசிரியர்களை அளிப்பதில் ஆர்வக்குறைவுடன் செயல்படுகிறது. குழந்தைகள் நன்கு படிக்க எவ்வகை நூல்களைக் கொடுக்கலாம், ஆசிரியர்களை எப்படி ஆர்வமுள்ளவர்களாக மாற்றலாம் என்பதைக் கூற நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. நிதியாதாரம்கூட இருக்கிறது. தரமான கல்வியைத் தர வேண்டும் என்ற உறுதியை மட்டுமே அரசு காட்ட வேண்டும். ஆரம்பப் பள்ளிக்கு முன்னதாகப் பயிலும் இடங்களிலும் அங்கன்வாடிகளிலும் நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிப்பதுடன், படிப்பதற்குத் தேவைப்படும் அனைத்து வசதிகளையும் அரசுகள் செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கான பயிற்சிகளிலும் கூடுதல் அக்கறை அவசியம். அங்கன்வாடிப் பள்ளிக்கூடங்களுக்கு நல்ல கட்டிடம் உள்ளிட்ட வசதிகளையும் செய்துதர வேண்டும். இவையெல்லாம் சாத்தியமாகும்போதுதான், அரசுப் பள்ளிக்கூடங்களில் படிக்கும் குழந்தைகள் தங்களுடைய கற்றல் திறனை வளர்த்துக்கொள்ள முடியும்; பிற தனியார்ப் பள்ளி மாணவர்களுக்கு ஈடாக நடைபோட முடியும்.

Post Top Ad