தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடந்த முறைகேடுகளை அடுத்து ஆசிரியர் தேர்வு வாரியத்திலும் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதால், தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைத்து ஆசிரியர் பணி நியமனத்தை கண்காணிக்க வேண்டும் என்று பட்டதாரிகள், ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் கடந்த 20 ஆண்டுகளாக முறைகேடுகள் நடந்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் செய்யப்பட உள்ள பணி நியமனங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதனால் பலர் விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கின்றனர். இதனால் அங்கும் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது என்று பட்டதாரிகள், ஆசிரியர்கள் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து, அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைத்து ஆசிரியர் நியமனங்களை கண்காணிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் தனிப் பிரிவில் மனு கொடுத்துள்ளனர். இது குறித்து ஆசிரியர் கூட்டமைப்பினர் கூறியதாவது:
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உள்ள 2331 கலை அறிவியல் கல்லூரிகளின் துணைப் பேராசிரியர் பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. புதிய தொழில் நுட்ப முறையால் பலர் விண்ணப்பங்களை பதிவேற்ற முடியாமல் தவிக்கின்ற நிலை ஏற்பட்டது. இருப்பினும் 39 ஆயிரத்து 418 பேர் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால்,அ வற்றில் 2000 விண்ணப்பங்கள் தான் சரியாக இருக்கிறது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்து, மற்ற விண்ணப்பங்களை தள்ளுபடி செய்யப் போவதாக அறிவித்துள்ளது. தள்ளுபடி செய்ய உள்ள விண்ணப்பங்களை ஏற்க வேண்டும் என்றால் குறிப்பிட்ட சில சான்றுகள், ஆவணங்கள் வேண்டும் என்றும் கேட்டுள்ளது. இதனால் பட்டதாரிகள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது முறைகேட்டுக்கு வழியாக அமைந்துவிடும். விண்ணப்பிக்கும் முறை என்பது Descriptive இருந்து Objective முறைக்கு மாறியது. பின்னர் Online முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு காரணம் வெளிப்படைத் தன்மை இருக்கும் என்பதால்தான். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது ஆன்லைன் என்னும் வெளிப்படைத் தன்மையை குறைத்துள்ளது. டிஆர்பியின் வழிகாட்டுதல்களில் பல இடங்களில் ஆன்லைன் சாப்ட்வேர் விடுபட்டுள்ளது. 1060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு விண்ணப்பத்தில் இது அதிகம் உள்ளது.
இளநிலை பொறியியல் படிப்பின் அட்டவணையில் Automobile பிரிவு விடுபட்டுள்ளது. மேனிலை பொறியியல் படிப்பு அட்டவணையில் முக்கிய பாடப்பிரிவுகளான Power Electronics, Metallurgy,welding போன்றவை விடுபட்டுள்ளன. டிஆர்பி தேர்தெடுத்த கணினி நிறுவனம் இந்த மென்பொருள்கள் உள்ள நிறுவனம்தானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தவிர விண்ணப்பிக்கும் நபர்களின் நன்னடத்தை சான்றுகளை டிஆர்பி கேட்கிறது. பிஎச்டி படிப்பில் இது போல நன்னடத்தை சான்றுகள் வழங்கப்படுவதில்லை. மேலும் ஒரு தனியார் நிறுவனத்திடம் நன்னடத்தையை உறுதி செய்ய கூறுவது சட்டத்தில் இல்லாதது. கடந்த காலங்களில் போலீசார் தான் குற்றப்பின்னணியை உறுதி செய்வார்கள். இதுபோன்ற பல்வேறு பிரச்னைகள் டிஆர்பியில் உள்ளது குறித்து சுட்டிக்காட்டி முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு கொடுத்தோம். அவற்றை டிஆர்பிக்கே முதல்வர் தனிப்பிரிவு அனுப்பி வைத்தது. அதன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தற்போது கொடுத்துள்ள மனு மீது முதல்வரே நேரடியாக நடவடிக்ைக எடுக்கும் விதமாக தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைத்து ஆசிரியர் பணி நியமனங்களை கண்காணிக்க வேண்டும்.
அதனால் டிஆர்பி பணி நியமனங்களை கண்காணிக்க தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்க வேண்டும்.