அரிய வாய்ப்பு: அரசு பணி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புக்கள்! - Asiriyar.Net

Friday, January 31, 2020

அரிய வாய்ப்பு: அரசு பணி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புக்கள்!





அரசு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பாக இலவச பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு தேவையான வழிகாட்டலும் பயிற்சியும் வழங்கும் நோக்கில் மாவட்டந்தோறும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில், தன்னார்வ பயிலும் வட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.

இவற்றில்TNPSC, TNUSRB, SSC, IBPS, RRB போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திறன்மிக்க பயிற்றுநர்களைக் கொண்டு நாள்தோறும் நடத்தப்பட்டு வருகின்றன.



இப்பயிற்சி வகுப்புகளில், தேர்வுகளுக்குத் தேவையான பாடக்குறிப்புகள், புத்தகங்கள், நாளிதழ்கள் ஆகியவை பராமரிக்கப்பட்டு வருவதுடன், மாதிரி தேர்வுகள், மாதிரி நேர்காணல்கள் ஆகியவையும் இலவசமாக நடத்தப்படுகின்றன.

தமிழகமெங்கும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக பயிற்சி பெற்று இதுவரை 3,888 மாணவர்கள் பல்வேறு அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுள் 31 பார்வையற்ற மாணவர்களும் பிற 11 மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர். 2019-ம் ஆண்டில் மட்டும் குரூப்-2 தேர்வில் 67 மாணவர்களும், குரூப்-4 தேர்வில் 317 மாணவர்களும், காவலர் தேர்வில் 354 மாணவர்களும் இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பல்வேறு போட்டித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பயனடைந்துள்ளனர்.

இந்த இலவசப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள, போட்டித்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாவட்ட தலைநகரங்களில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களை அணுகி தன்னார்வ பயிலும் வட்டத்தின் சேவைகளைப் பெற இயலாதவர்களும், தொலைதூர கிராமப்புறப் பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களும், இருந்த இடத்தில் இருந்தே போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்ய விரும்பும் பிற மாணவர்களும் பயன்பெறுவதற்கென தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையினால் மெய்நிகர் கற்றல் வலைதளம் (https://tamilnaducareersrvices.tn.gov.in/) செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் TNPSC (Group I, Group II & Group VIIB / VIII), TNUSRB, SSC, IBPS, RRB போன்ற போட்டித்தேர்வுகளுக்கென, அந்தந்த
தேர்வுக்கான பாடத்திட்டத்தின் தலைப்புகள் வாரியாக மென்பாடக் குறிப்புகள் பதிவேற்றப்பட்டு உள்ளன. மேலும் இப்பாடக்குறிப்புகள் தொடர்பான வகுப்புகளும் ஒலி மற்றும் காணொலி வடிவில் பதிவேற்றப்பட்டு வருகின்றன.

இத்தளத்தில் வெவ்வேறு தேர்வுகளுக்கென பல்வேறு தலைப்பின் கீழ் மென் பாடக்குறிப்புகளும் மாதிரி வினாத்தாள்களும் சீரான கால இடைவெளியில் தொடர்ச்சியாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

இது தவிர இவ்வலைதளத்தை அலைபேசி வாயிலாகப் பயன்படுத்துவதற்கென ஒரு அலைபேசி செயலியும் தயாரிக்கப்பட்டுள்ளது. இச்செயலியை https://tamilnaducareersrvices.tn.gov.in/ தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்துவதன் வாயிலாக இந்த மெய்நிகர் கற்றல் வலைதளத்தில் ஏற்றப்படும் போட்டித் தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகளைத் தத்தமது அலைபேசியிலேயே படிக்க இயலும்.


எனவே அரசுத்துறையில் வேலை பெற விரும்பும் இளைஞர்கள் அனைவரும் இவ்விணையதளத்தில் தங்களது பெயர்களைப் பதிவு செய்து இவ்வலைதளத்தின் சேவைகளை இலவசமாகப் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad